க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு எனது அமைச்சு பதவி தடை என்றால் அதை உறுதி செய்யட்டும் மக்களுக்காக அமைச்சு பதவியை திறக்க நான் தயாராக உள்ளேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரை விடுத்தார்.
அட்டன் போடைஸ் தோட்டத்தில் கொணக்கலை பிரிவில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, 16.10.2016 அன்று, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,
தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்து விட்டால் அமைச்சு பதவியை திறப்பேன் என வந்த பத்திரிகை செய்தியை வைத்துக்கொண்டு பலர் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். அத்தோடு ஊடகங்கங்கள் பலவும் விமர்சனங்களை செய்து வருகின்றது.
நான் வாக்கு வாங்கியது நுவரெலியா மாவட்டத்தில் ஆனால் பதுளை, இரத்தினபுரி போன்ற இடங்களில் திகாம்பரத்திற்கு ஒரு இலட்சம் வாக்களித்தோம் என மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை காட்டுகின்றனர். இது நகைப்புக்குரிய விடயமாகும். இதில் குறித்த ஒரு தமிழ் ஊடகமும் தமது செய்திக்காக மக்களை தூண்டிவிட்டு என்னை விமர்சிப்பது விந்தையான விடயமாகும்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தருவதாக நாம் கூறவில்லை. ஆனால் வாக்குறுதி அளித்தோம். தனி வீடு ஏழு பேர்ச் காணி, சிறுவர் பராமரிப்பு நிலையம் என கட்டிப்கொடுப்பதும், பெற்றுக்கொடுப்பதுமாகவே நாம் வாக்குறுதிகளை வழங்கினோம். அதை நிறைவேற்றி வருகின்றோம்.
இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை இலவசமாக பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இதற்காக தேயிலை சபையில் நவீன் திஸாநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகிய அமைச்சர்கள் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் கடதாசியை வைத்துக்கொண்டு போலியான பிரச்சாரங்களை என் மீது சிலர் திணித்து வருகின்றனர்.
வாயை திறந்தால் பொய்யான வாக்குறுதியும், கண்ணை திறந்துக் கொண்டிருக்கும் போது பகல் கொள்ளையும் செய்து வருகின்றவர்கள் எனது அமைச்சு பதவி ஊடாக செய்யப்படும் அபிவிருத்தி வேலைகளை பொறுக்க முடியாது அமைச்சு பதவி ஆயிரம் ரூபாய்க்கு தடை என்பதால் பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
ஆயிரம் ரூபாய்க்கு எனது அமைச்சு பதவி தடை என்றால் நிருபிக்கட்டும் மக்களுக்காக அமைச்சியை தூக்கி எறிய நான் தயார். அமைச்சுக்கும் கம்பனிக்கும் சம்பள ஒப்பந்தம் மேற்கொள்ளபடுமேயானால் நான் பேச்சுவார்த்தையை செய்கின்றேன். ஆனால் சம்பள பேச்சுவார்த்தை தொழிற்சங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் நடக்கும் ஒன்றாகும். எந்த நிலையிலையும் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அமைச்சு பதவியை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கும் சோரம் போக மாட்டேன்.
மக்கள் தமது உரிமைக்காக போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். இன்றைய விலைவாசியில் ஆியரம் ரூபாய் போதாது. இருந்தும் போராட்டத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவும் நிலுவை சம்பளமும் வேண்டும் என கோரி போராடும் எம் மக்களுக்கு துணை நின்று நானும் பேராடுவேன். சம்பளமும், நிலுவை சம்பளமும் கிடைக்கும் வரை மக்களோடு தொடர்ந்தும் போராடத்தை செய்து வருவேன்.
2006ம் ஆண்டு மாகாண சபையில் நான் இருக்கும் பொழுது சம்பளத்திற்கான போராட்டம் என் மூலமாகவே நடத்தப்பட்டது. தொழிலாளர்களை ஏமாற்றும் தலைவர்களின் மீது கோபமே தவிர மக்கள் மீது அல்ல என தெரிவித்த அவர்,
எனது அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் தலை தூக்கி உள்ள நிலையில் கட்டப்படும் வீடுகள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக செய்யப்படுவதாக சொல்கின்றார்கள். ஆனால் ட்ரஸ்ட் நிறுவனம் எனது அமைச்சின் முகவர் நிலையமே தவிர எனக்கு வாக்களித்தமையினால் கிடைத்த அமைச்சின் ஊடாகவே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.