மண் அகழ்தல் மற்றும் காடழித்தல் தொடர்பில் தற்போதிருக்கும் நிறுவனக் கட்டமைப்புடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் அங்கீகாரம் பெறப்பட்டாலும் இறுதியில் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் தன்னுடைய அங்கீகாரத்தையும் பெறுவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் முறையற்ற வகையில் மண் அகழ்தல், காடழிப்பு, மணல் கொண்டு செல்லப்படுதல் பற்றிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் இத்தகைய செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் விசாரணை நடத்தி அவற்றுக்கான அங்கீகாரத்தை வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்ககையும் எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் மற்றும் மின்னியல் கழிவு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்துவதற்காக இன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனைத்து நிறுவனங்களும் மேலும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டுமெனவும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் மற்றும் மின்னியல் கழிவுப்பொருள் ஒழிப்பு தேசிய வாரம் எதிர்வரும் 24ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த வாரத்தில் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் இரத்திரனியல் கழிவு முகாமைத்துவம், மீள்சுழற்சி போன்ற விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.