தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் முன்னாள் தலைவர் முகைதீன் பாவா அக்கட்சியின் உயர்சபையினரால் கட்சியில் இருந்தும் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
இது தொடர்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் அஹமட் புர்க்கான் அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் சகோதரர் முகைதீன் பாவா அவர்கள் தனது சுயநலத்திற்காக கட்சியையும் கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் அடகு வைத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழுள்ள சீனி கூட்டுத்தாபனம் ஒன்றில் உயர் பதவியொன்றை பெற்றது தொடர்பில் முகைதீன் பாவா அவர்களுக்கு எதிராக கட்சியின் உயர்சபையினரால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிகமாக தலைமைப்பொறுப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து கௌரவக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பின்னர் அந்த அறிவிப்பினை தான் கூறவில்லை என்று மறுத்திருந்தார். அது தொடர்பில் மீண்டும் உயர்சபையினர் முகைதீன் பாவா அவர்களை விளக்கம் அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவ்வேண்டுகோளை நிராகரித்த சகோதரர் முகைதீன்பாவா தற்போது வேறு சிலரின் தூண்டுதலின் பெயரில் செயல்பட்டு வருகிறார்.
கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்பட்டமைக்கு எதிராகவும் கட்சியை தன்னுடைய சுய தேவைக்காக தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் கட்சியின் முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சகோதரர் முகைதீன் பாவா தன்னை நியாயப் படுத்த வேறுசில புதுக்கதை பேசிவருகிறார்.
எனவே அவருடைய இந்த நடவடிக்கை தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் குழப்பம் அடையத் தேவையில்லையெனவும் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் சகோதரர் முகைதீன் பாவா அவர்கள் கட்சியை விட்டு தாமாகவே வெளியேறியுள்ளார். எனவே எதிர்வரும் சனிக்கிழமை மாலை உயர்சபை கூடி இதுவிடயத்தில் இறுதித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் கட்சி விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு முகைதீன் பாவா அவர்களுக்கு எந்த உரித்தும் இல்லையெனவும் தெரிவித்தார்.