இதய சுத்தியோடு அரசியல் செய்யும் தன்னம்பிக்கை எம்மிடமுண்டு – அமைச்சர் பழனி திகாம்பரம்

பாராளுமன்றத்திற்கு மக்களின் பிரதிநிதியாக வாக்களித்து எம்மை அனுப்பிவைத்த மக்களை காட்டிக் கொடுக்காது இதய சுத்தியோடு அரசியல் செய்யும் தன்னம்பிக்கையும் கொள்கையும் எம்மிடமுண்டு என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுளூ

இன்று இலங்கை ஊடகங்களிலும் சில சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாக அமையும் அளவிற்கு தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலாக விளங்குகின்ற தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற தொழிற்துறையில் தொழில்புரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1992ம் ஆண்டு முதல் கூட்டொப்பந்தத்தின் மூலமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த சம்பள நிர்ணயமானது தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் பெருந்தோட்ட கம்பனிகளுமான பேச்சுவார்த்தையினூடாகவே தீர்மானிக்கப்டுகிறது. 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு காட்டிகொடுப்பினூடாக தங்களின் சுயநல அரசியல் தன்மையினை வெளிப்படுத்தியே வந்துள்ளனர். மல்லியப்புசந்தியில் நாட்காலிக்கு மாலைப்போட்டு 500 ரூபா சம்பளத்திற்காக போராட்டத்தை காட்டிக்கொடுத்தில் தொடங்கி இன்று 1000 ரூபா போராட்டம் வரை இந்த கசப்பான வரலாறே பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொருமுறையும் காட்டிக்கொடுப்புகளை செய்துவிட்டு தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வினை பெற்றுக் கொடுக்க அழுத்தத்தினை வழங்கி வரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்களை குறை கூறிவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர், இம்முறை 'தொழிற்சங்கம் பற்றி தெரியாதவர்களின் தலையீடே தொழிலாளர்களின் சம்பள இழுபறிக்கு காரணம்' என செவ்வி வழங்கியுள்ளார். மஸ்கெலியாவில் தொழிலாளர்களின் சம்பள போராட்டத்தை நடத்தவிடாமல் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுக் கொண்டது நாங்கள் எனவும் விமர்சிக்கப்படுகிறது. மக்களின் நியாயமான போராட்டங்களை காட்டிக் கொடுத்து அரசியல் செய்யும் தேவை எமக்கில்லை. நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவிற்கும் எமக்கும் எதுவித தொடர்புமில்லை. வேண்டுமெனில் பொலிஸ்பொறுப்பதிகாரியினூடாக தடையுத்தரவிற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற உண்மையை கேட்டறிந்து உறுதிசெய்து கொள்ள முடியும். 

கடந்த காலத்தில் அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள், தானும் தன்னைசுற்றி உள்ளவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு, வாக்களித்த மக்களின் நலன் சாராத போலி திட்டங்களை முன்னெடுத்து வந்தனர். 2015ம் ஆண்டு ஜனவரி ஆட்சி மாற்றத்தின் பின் 100 நாள் வேலைத்திட்டத்திலே அமைச்சுப் பொறுப்பபேற்றப்பின் மலையக வரலாற்றில் என்றுமில்லாதவாறு அபிவிருத்தித் திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்படுவதை அவதானித்து, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இவர்கள் வெற்றிபெற இவர்களின் வேறந்த பருப்பும் மக்கள் மத்தியில் வேகாதென தெரிந்ததும், தங்களால் இயலாதென தெரிந்து 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்போம் என வாய்ச்சவிடால் விட்டனர். ஆனாலும் எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அல்ல அதற்கு மேலதிகமாகவும் எந்த தொழிற்சங்கம் சம்பளவுயர்வை பெற்றுக் கொடுக்க முன்வந்தாலும் அதற்கான முழுமையான ஆதரவை நாங்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கமும் கூட்டமைப்பும் வழங்கும். அதேபோல இந்த 1000 ரூபா சம்பளவுயர்வுக்கும் நாங்கள் ஆதரவே வழங்கினோம். ஆனால் இவர்கள் அப்பாவி தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையினை கருத்திற்கொள்ளாது கஸ்டத்தினை உணராது சுயநல அரசியல் காரணங்களுக்காக 18 மாதங்கள் கடந்த நிலையிலும் பேச்சுவார்த்தையினை இழுபறி நிலைக்குள்ளாக்கினர். மக்களின் இக்கட்டான நிலைமையினை கருத்திற்கொண்டே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அழுத்தம் கொடுத்து இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவினை பெற்றுக் கொடுத்தோம். ஆனால் தற்பொழுது இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டதாலேயே நிலுவை சம்பளம் வழங்கமுடியாமல் உள்ளது என எம்மை விமர்சிக்கின்றனர். 18 மாத நிலுவை சம்பளத்தினை கட்டாயமாக அவர்கள் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டும். அதைவிடுத்து அமைச்சராகவிருந்து பெற்றுக் கொடுக்க முடியாதா என மக்களை திசைத்திருப்பி எமக்கெதிராக செயற்பட வைக்கின்றனர். 

மேதின கூட்டத்தில் சம்பள பேச்சுவார்த்தையில் இதொகா மௌனம் காப்பதற்கு காரணம் இலங்கையின் தேயிலை உலக சந்தையில் விலை குறைவடைந்துள்ளது. தற்பொழுது சம்பளவுயர்வு கேட்டால் சில சதங்களே கிடைக்கும். பெற்றுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் பெற்றுக் கொடுப்போம் 1000 ரூபா தோட்டத்தொழிலாளர்களின் பொக்கட்டுகளில் தானாக வந்து விழும் என்று உரை நிகழ்த்தியவர்கள் இன்று 1000 ரூபா எங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை பேச்சுவார்த்தையின்போது அதிகரிக்கலாம் அல்லது குறைவடையலாம் என அறிக்கை விடுகின்றனர். 

மலையகத்தில் இருக்கின்ற தொழிற்சங்களை ஒரு பொருட்டாகவே நான் கருதவில்லை என செவ்வி வழங்கும் அளவுக்கு தன்னாதிக்க மேம்போக்கு அரசியல் கொள்கையுடையவர்கள் நாங்கள் அல்ல. தோட்டத்தொழிலாளர்களின் தேவையுணர்ந்து அடிதளத்திலிருந்து சேவையாற்றி வருகின்றோம். வீடமைப்புத் திட்டங்கள் என மாடி லயங்களை கட்டுவிக்காமல் தோட்டத்தொழிலாளர்கள் சுயாதீனமாக வாழ நிலையான 7 பேர்ச் காணி உரித்துடன் தனி வீடு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இது வெறுமனே கண்துடைப்பாக அல்லாமல் 5 வருடத்தில் 50000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். மலையக பகுதிகளுக்கு சேவையாற்றவென ஒரு அரச அதிகாரசபை இல்லாத நிலையில் கடந்த கால அமைச்சர்களால் உருவாக்கப்படாதநிலையில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து இன்று மலையகதிற்கென மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை உருவாக்குவதற்கான அமைச்சரவை அனுமதியினை பெற்றுள்ளோம். 

மலையக மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதொடு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைதரத்தினை உயர்த்துவதற்காகவும் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். இதுவரைகாலமும் தோட்டபுறங்களுக்கு சேவையாற்ற தடையாகவிருத்த பிரதேச சபை சட்டத்தில் தற்பொழுது மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். இது போன்ற பாரிய வேலைத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை ஆட்சிக்குக் கொண்டுவந்து குறுகிய காலத்துக்குள்ளே முன்னெடுக்கப்பட்டுள்ளது. பலவருடங்களாக அமைச்சுப்பொறுப்புக்களை வகித்தவர்களால் சாத்தியமில்லாமல் போனமைக்கு அவர்களின் சுயநல அரசியலே காரணம். இவ்வாறான அபிவிருத்திகளை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள் இவர்களுக்கு வக்காளத்து வாங்கும் சில ஊடகங்களோடு சேர்ந்து மக்கள் மத்தியில் எம்மையும் எமது அபிவிருத்தி பணிகளையும் வேறுவிதமாக திரிபு படுத்திக் காட்டுகின்றனர். 

எம்மீது எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மக்களின் உரிமைகளுக்காக நியாயமான போராட்டத்தை காட்டிக் கொடுக்காது இதய சுத்தியோடு மக்களுக்கான மக்கள் அரசியல் செய்யும் தன்னம்பிக்கை எமக்குண்டு. அதற்காக அமைச்சுப்பொறுப்புக்களை துறக்கவும் தயங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -