இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் மக்களின் கூடிய ஒத்துழைப்பு கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில,
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எந்த வகையிலும் மைத்திரியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணியின் ஊடாக போட்டியிட போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பணி. புதிய கூட்டணியை உருவாக்குவது எங்களது பணி. அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர். புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஞானசார தேரர், வீரவங்சவும் நானும் தடையாக இருப்பதாகவும் எங்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சீ. மயூரன் கூறியுள்ளார்.
நாங்கள் நல்லிணக்கத்திற்கு எந்த தடையையும் செய்யவில்லை. அரசாங்கம் 20 மாதங்கள் முக்கி முனங்கி நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டத்தை தயாரித்து கொண்டது.
சந்திரிக்கா அம்மையார் தலைமையில் இயங்கும் அலுவலகம் அதனை தயாரித்தது. அதனை ஜனாதிபதியே அமைச்சரவையில் சமர்பித்தார். அமைச்சர் மனோ கணேசன் எதிர்த்ததால், அமைச்சரவையில் இந்த யோசனையை நிறைவேற்ற முடியாது போனது. தனது அமைச்சில் சந்திரிக்கா தலையிடுகிறார் என மனோ கணேசன் முறையிட்டுள்ளார்.
இவர்கள் இருவரின் மோதல் காரணமாகவே அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டம் ஸ்தம்பித்துள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முன்னர், தலைவருக்கும் தலைவிக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
நல்லிணக்கத்திற்கு தடை ஏற்படுத்துபவர்களை கைது செய்ய வேண்டுமாயின் எங்களை கைது செய்வதை விட நல்லிணக்கத்திற்கு சண்டையிட்டு கொள்ளும் சந்திரிக்கா அம்மையாரையும் அமைச்சர் மனோ கணேசனையும் கைது செய்ய வேண்டும் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.