பைஷல் இஸ்மாயில் -
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிரயோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும் என்று கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்து சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, ஒலுவில் இக்றா பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று (02) உலக சிறுவர் தின்ததையொட்டி இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் மீதான துஷ்பிரயோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படுகின்றது.
இவ்விடயம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப்படுகின்றனர். அத்தோடு அவர்கள் அடுத்தவர்களில் தங்கி வாழ்கின்ற பலவீனர்களாகக் காணப்படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன.
இவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய கொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண்டு ஐ.நா சபையானது 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என வரையறுத்துள்ளது.
சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும் என்பதற்காக அக்டோபர் முதலாம் தேதியை சர்வதேச சிறுவர் தினமாக இன்று கொண்டாடி வருகின்றது.
இதேபோல் முதியோர் தினத்தையும் இதே தேதியில் கொண்டாடி வருகின்றோம். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டதையடுத்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.