வி.ரி.சகாதேவராஜா-
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசம் அண்மைக்காலமாக கடலரிப்பிற்கு உள்ளாகிவரும் வீதம் அதிகரித்துவருகின்றது. இதற்கு அடிப்படைக்காரணம் ஒலுவில் துறைமுக நிருமாணிப்பு என மக்களாலும் மீனவர்களாலும் கூறப்பட்டுவருகின்றது. திட்டமிடப்பட்டாதவகையில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டால் முழு கரையோரமும் அள்ளுண்டுபோகும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் 116கிலோமீற்றர் கரையோரப்பிரதேசம் உள்ளது. இது இயற்கைவளம். அவற்றில் பெரும்பாலான பிரதேசங்கள் இன்று கடலரிப்பிற்குள்ளாகிவருகின்றன.
ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்தால் பாரிய நில அரிப்பு அம்பாறை மாவட்ட கரையோரத்தில் ஏற்பட்டு வருகின்றது எனவும் சுமார் 100 மீற்றர் அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவ அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஒலுவில் பிரதேசத்தில் இக்கடலரிப்பு சமாச்சாரம் அரசியல் மயமாக்கப்பட்டு எதிரும் புதிருமான கருத்துக்களும் சம்பவங்களும் ஊடகங்களில் அரங்கேறியிருந்ததை இவ்வண் குறிப்பிடலாம்.
இவ்வாரம் அதேபோன்றதொரு சலசலப்பு நிந்தவூரிலும் இடம்பெற்றிருந்தது. இதனால் ஆழ்கடல் மீன் பிடிப்பாளர்களும் கரையோர மீன் பிடிப்பாளர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது கடற்கலங்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிவருகின்றன. அண்மையில் நிந்தவூரில் அமைதியான கவனஈர்ப்புப்பேரணியொன்றை நடாத்த மீனவர்சங்கங்கள் முடிவு செய்திருந்தது.
இதன்போது அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் நிந்தவூர் பிரதேசசெயலாளரிடமும் மனிதஉரிமைகள்ஆணைக்குழுவிடமும் மனித அபிவிருத்தித்தாபனத்திடமும் கையளித்தனர். ஜனாதிபதி வரைக்குமான மகஜர்கள் பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கப்பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
இக்கடலரிப்பின் காரணமாக நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 5000 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 கரைவலை தோணிகளை கொண்டு ஜீவன உபாயத்தை நடாத்தி வரும் மீனவர்கள் மிகப் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். கடலரிப்பின் காரணமாக பூமிக்கு அடியிலுள்ள பாறைகள் வெளியாகி கரைவலை மீனவர்களின் வலைகளையும், படகுகளையும் சேதத்திற்குள்ளாகின்றது. இதே போன்று கரையில் காணப்பட்ட தென்னை மரங்கள், பனை மரங்களும் கடலரிப்பினால் பாறைகளுக்குள் அடைந்து கிடக்கின்றன. இதன் காரணமாகவும் மீனவர்களின் உடைமைகள் சேதமடைகின்றது.
இவற்றுக்கெல்லாம் பிரதான காரணமாக ஒலுவில் துறைமுகத்தில் கடல் நீர்ரோட்டத்தை தடைப்படும் வகையில் கடலுக்குள் அமைக்கப்பட்ட பாதையே பிரதான காரணமாக காணப்படுகின்றது. இது தொடர்பாக இம்மீனவர்கள் அரச நிர்வாகத்தினரிடமும், அரசியல் வாதிகளிடமும் பல தடைவைகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எவ்வித பயனும் இல்லாமல் இன்றும் அதே அவல நிலை தொடர்கின்றது. அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பல மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றது. தங்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை கூட இடைநிறுத்தும் அளவிற்கு இப்பிரச்சினைகள் மேலோங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மனித அபிவிருத்தி தாபனம் கடந்க 04 வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட மீனவ வலைப்பின்னலை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றது. இதில் சுமார் 60 சங்கங்கள் அங்கத்துவம் வகிப்பதுடன் 10000 இற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றது. இவ்வமைப்பு மீனவர்களின் உரிமைகளின் வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
இவ்வமைப்பின் ஊடாக தனிப்பட்ட மீனவர்களும், குழு மீனவர்களும் பல்வேறு மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். இம் அம்பாறை மாவட்ட மீனவ வலைப்பின்னல் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நிந்தவூர் மீனவ சமாசம் சுயமாக தங்களுடைய பிரச்சினைகளை பிரதேச செயலாளர் தொடக்கம் ஜனாதிபதி வரை எத்திவைக்கும் மகஜர் ஒன்றிணை கையளித்துள்ளனர்.
இம்சமாசத்தின் தலைவர் எம்.ஏ.ஜமால்தீன், செயலாளர் எஸ்.ஜ.பதுதீன், என்பவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய இம்மகஜர் கையளிக்கப்பட்டது.
இம்மகஜரில் கீழ் உள்ள விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தில் ஏற்பட்ட மண் அரிப்பினை தடுப்பதற்காக போடப்படும் கற்கள் காரணமாக கடந்த 02 வாரங்களாக நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மாட்டுப்பள்ளம் அட்டப்பள்ளம் வெளவாலோடை மத்தியதுறை வெட்டாத்து பிரதேசம் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
2 உடனடியாக போடப்பட்ட பாறைகள் அகற்றப்பட்டு மீனவர்களின் பொருளாதார உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
3 40 கரைவலை தோணிகளும்215 ஆழ் கடல் தோணிகளும் தடையின்றி மீன் பிடியில் ஈடுபட இடமளிக்கப்பட வேண்டும்.
4 தற்போது பிரதேச மக்கள் கடற்கரை பிரதேசத்தில்; கட்டிட இடிபாடுகள், குப்பைகள் போடப்படுவதை உடன் நிறுத்தப்பட வேண்டும்.
என்பன பிரதான அம்சங்களாக உள்வாங்கப்பட்டுள்ளது.
மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் கூறுகையில் ,
மீனவ வலைப்பின்னல் அமைப்பின் செயற்பாடுகள் வரவேற்க தக்க விடயமாக காணப்படுகின்றது. அவர்கள் சுயமாக அடையாளங்கண்டு அதற்கான ஆலோசனைகளை உரியவர்களிடம் பெற்று அவர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க உரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
பொருளாதார சமூகக் கலாச்சார உடன்பாட்டிற்கு அமைய எந்தவொரு தொழிலாளருக்கும் தங்களுடைய தொழிலை தடையின்றி செய்வதற்கு உரிமைகள் எமது நாட்டில் காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு கரையோர ஒட்டு மொத்த மீனவர்களின் சுனாமியால் அனைத்தையும் இழந்த தொழிலாளர் குழுவாகும். நாட்டின் அபிவிருத்திற்காக செய்யப்படும் திட்டங்கள் சாதாரண தொழிலாளரை பாதிக்குமே ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்நிலை தான் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.
கப்பல்கள் துறைமுகமாக அமைக்கப்பட்ட இத்துறைமுகம் மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டு முடிவு பெற்றுள்ளது. ஆனால் இத்துறைமுகத்தில் மீனவ தோணிகள் மட்டுமே நங்கூரம் இடப்படுகின்றது. ஏதிர்பார்த்த விளைவுகள் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கபெறவில்லை. முற்றாக கடலரிப்பு ஒரு புறமாக அதிகரித்துச் செல்கின்றது. நிந்தவூர் கடற்கரை மீது வரை அலைகள் வரத் தொடங்கியுள்ளது.
இன்னும் சிறிது காலத்தில் மக்கள் குடியிருப்புக்களையும் கடல் அலைகளின் தாக்கங்கள் ஏற்படும்.
தற்போது இதற்கான சரியான தீர்மானம் ஒன்றிணை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்துவதன் மூலம் கடலரிப்பை பாதுகாப்பதுடன் மீனவர்களுடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். மீனவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க பின்வாங்குபவர்களாக இருந்தால் அடிப்படை மனித உரிமை வழக்குகள் தொடுப்பதற்கு மனித அபிவிருத்தி தாபனம் தயாராகவுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேபோன்றதொரு நிலைமை காரைதீவிலும் ஏற்பட்டுள்ளதாக காரைதீவு சக்தி மீன்பிடி சந்தைப்படுத்தல் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் காரசாரமாக தெரிவித்திருந்தார்.
காரைதீவில் 52கரையோரத்தோணிகளும் 64இயந்திரப்படகுகளும் 91மாயாவலைத்தோணிகளுமுண்டு. மொத்தம் 1823 மீனவர்களுள்ளனர்.தற்போதுள்ள பிரதேசத்தில் பிடிபடும் மீனைப்பதப்படுத்தக்கூட இடமில்லாத நிலைமை தென்படுகிறது.கடலரிப்பு தீவிரமாகிக்கொண்டுவருகிறது
எமது மயானத்தை தினம்தினம் கடல் அரித்துவருகிறது. அந்நிலை தொடர்ந்தால் காரைதீவுக்கு மயானமே இல்லையென்ற நிலை உருவாகிவிடும். மீனவர்களின் ஜீவனோபாயம் தொடர்பாகவும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் கரையோரப்பாதுகாப்புத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கரையோரச்சட்டம் சூழல் மாசடைதல் பற்றியெல்லாம் கூறப்பட்டது. இச்சட்டங்கள் பரவலாக அனைத்துப்பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். காரைதீவுக்கு ஒரு சட்டம் ஒலுவிலுக்கு இன்னொரு சட்டமாக இருக்கக்கூடாது. பாதுகாப்பு வலயத்துள் பொதுக்கட்டடம் அமைக்கக்கூடாது என்கிறீர்கள். ஆனால் இப்பிராந்தியத்தில் எத்தனையோ பொதுக்கட்டடங்கள் அப்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு அனுமதி வழங்கியது யார்? தமிழ்மக்களுக்கு மட்டும்தானா இந்த இறுக்கமானசட்டம்?
கரையோர தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு போதிய குடிநீர்வசதி இல்லை. நீரைப்பெற தூரம் செல்லவேண்டியுள்ளது.அதனை நிவர்த்திக்கமுன்வரவேண்டும்.
எனவே வெள்ளம் வருமுன் அணைகட்டவேண்டும் என்ற வாக்கிற்கமைவாக கடலோரம் முற்றாக அரிப்பிற்குள்ளாக முன் பாதுகாக்கப்படவேண்டும். அதற்காக இனமத கட்சி பேதமின்றி சகலரும் இணைந்து சரியான திட்டமொன்றை முன்வைத்து அதனூடாக கரையோரத்தைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே எமது அவா.