2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பலம் வாய்ந்த அரசை கவிழ்த்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சிக் கூட்டணி தேசிய அரசு இன்று பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது.
அரசியலமைப்பின் மீதான 19 ஆவது சீர்திருத்தச் சட்டத்தை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கொண்டுவந்து நாட்டின் அடிப்படை ஜனநாயக கட்டமைப்புக்களை வலுப்படுத்தியதோடு சுயாதீன ஆணைக்குழுக்களையும் ஏற்படுத்தியதன் மூலம் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்கான அடித்தளத்தை தேசிய அரசு ஏற்படுத்தி சாதனை படைத்தமை வரலாறாகும்.
அதேபோன்று இடைக்கால அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் எதிர்கொண்டிருந்த பல உடனடி பிரச்சினைகளிற்கும் இடைக்கால அரசு பல தீர்வுகளை முன்வைத்திருந்தது.
தற்பொழுது அமுலில் உள்ள அரசியல் யாப்பில் உள்ள இன்னோரன்ன குறைபாடுகளை நிவிர்த்தி செய்து புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவு செய்வதற்காக இலங்கைப் பாராளுமன்றம் (05/04/2016) முதல் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது.
அதேவேளை சர்வதேச சமூகத்தினால் தனிமைப்படுத்தப் பட்டிருந்த இலங்கை இன்று தனது உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்கும் சர்வதேச சமூகத்தின் நெருக்குவாரங்களில் இருந்து விடுபடுவதற்கும் நல்லாட்சி அரசு தனது இராஜ தந்திர நடவடிக்கைகளை துரிதப்படுத்தியமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
என்றாலும் தற்போதைய நிலையில் நல்லாட்சி தேசிய அரசு இரண்டு பல்வேறு பிரதான சவால்களை சந்தித்து வருகின்றது அவற்றை இரு பிரதான
தலைப்புக்களின் கீழ் ஆராயலாம்:
- பொருளாதார நெருக்கடி.
- அரசியல் நெருக்கடி.
பாரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை.
2016 இறுதியில் இலங்கை அரசு 103 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் என மதிப்பிடப் பட்டுள்ளது, சுமார் 60% வெளிநாட்டுக் கடன்கள், இப்போதைக்கு தலைக்கு 325000 ரூபாய்கள் கடன். இது மொத்த தேசிய உற்பத்தியில் 100% விகிதம் கடன் மதிப்பிடப் பட்டுள்ளது.
இவ்வருடமும் அடுத்த வருடமும் மீள் செலுத்தப் படவேண்டிய கடன் தொகை சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
மைத்ரி அரசு பதவிக்கு வந்தவுடன் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்க அதனைநிராகரித்த நிதியம் தற்பொழுது சுமார் 1.5 பில்லியன்களை வழங்க பல்வேறு பொருளாதார சீர்திருத்த நிபந்தனைகளை விதித்துள்ளது.
வெளிநாட்டுக் கடன்களைக் செலுத்துவதற்கு அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துதல், எதிர்கால அரச அபிவிருத்திகளில் பலதேசியக்க் கம்பனிகளை பங்குதாரர் ஆக்குதல், பொருள்கள் சேவைகள் மீதான VAT வரியை அதிகரித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அரசு இருக்கின்றது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பாரிய அளவில் ஊழல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட உயர்மட்ட அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்வதாகவும், வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள சொத்து செல்வங்களை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்த நல்லாட்சி அரசு அதற்காக பல விசாரணைக் குழுக்களை குறிப்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி மோசடி விசாரணைக்குழு, ஜனாதிபதி விசாரணை கமிஷன், அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக் குழு என பல பொறிமுறைகள் செயற்பட்டாலும் இதுவரை குறிப்பிட்டுக் கூறக் கூடிய எவ்வித முன்னேற்றமும் இடம் பெறவில்லை.
அரசியல் நெருக்கடி
தற்போதைய தேசிய அரசில் ஜனாதிபதி மைத்ரி, பிரதமர் ரணில் ஆகியோர் புரிந்துணர்வுடன் செயற்பட்டாலும் அவ்விருவரும் இரு பிரதான தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் ஆவர்.
இன்று தேசிய அரசியலில் குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் மூன்றாவது அணியாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அவர்களோடுள்ள கடும் போக்கு உதிரிக் கட்சிகளும் களமிரங்குகின்ற சமிக்ஞைகளை வெளியிட்டு வருவது அரசிற்கு பன்முக சவால்களை தோற்றுவித்துள்ளது.
மேற்படி தரப்பினர் மீண்டும் தமது பலமான அரசியல் பிரவேசத்திற்கு கடும்போக்குவாத இனமதவெறி பரப்புரைகளில் தங்கியிருப்பதனை குறிப்பாக சிறுபான்மை இனங்களுக்கெதிரான அரசியல் பரப்புரைகளில் ஈடுபாடு காட்டுவதனை நாம் அறிவோம்.
அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மஹிந்த அணி பிளவு படுவதை ஏதேனும் வகையில் கையாள்வதன் மூலம் மாத்திரமே உள்ளூராட்சி தேர்தல்களில் மாத்திரமன்றி எதிர்கால பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முகம்கொடுக்கும் வகையில் சுதந்திரக் கட்சியை பலப் படுத்திக் கொள்ளும் கடப்பாடு ஜனாதிபதி மைதிரிக்கு இருக்கின்றது.
அதேபோன்றே ஏதோ ஒரு வகையில் சுதந்திரக் கட்சியை பலவீனப் படுத்தவேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சியிற்கு இருப்பதனை அண்மைக்கால நகர்வுகள் உணர்த்துகின்றன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ அணியினரை பிரித்தெடுப்பதில் அவர்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றன.
இந்த நிலையில் தான் பல்வேறு பாரிய ஊழல் மோசடி குற்றங்களுக்காக பிடிக்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்ட பின்னரும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் புரிந்துணர்வுகளில் பெரும்நம்பிக்கைகளுடன் ஈடுபாடுகாட்டி வருகின்றனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அரசியலுக்கு வருவாரா ? அதிபர் மஹிந்த பிரதமர் வேட்பாளராக வருவாரா..? அவர்கள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்டால் சந்திரிக்கா அம்மையார் தேசிய அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொள்வாரா ? என்றெல்லாம் செய்திகள் அடிபடுகின்றன.
இவ்வாறான அரசியல்கள நிலவரங்களில் மூன்றாம் அணியினருக்கும் கடும்போக்கு உதிரிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சாதகமான சந்தை வாய்ப்புக்கள் அவர்களுக்கு துணை போகும் இன மத வெறிக் கும்பல்களிற்கு மிகச் சாதகமான களநிலவரங்களை தோற்றுவித்துள்ளன.
நல்லாட்சி கூட்டணி அரசு இன்னும் எவ்வளவு காலத்திற்கு நிலித்து நிற்கும் என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, இவ்வாறான தேசிய அரசியல் கள நிலவரங்களை, தேசிய அரசியல் தலைமைகளின் திரிசங்கு நிலைமைகளை கவனத்தில் கொண்டு சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் கூட்டுப் பொறுப்புணர்வுடன், சாணக்கியமாகவும், சாதுரியமாகவும் சமூகத்தின் தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும்!
மஸிஹுதீன் இனாமுல்லாஹ்.