அஸ்லம் எஸ்.மௌலானா-
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான கிளை நிறுவனம் சாய்ந்தமருது நகரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் வர்த்தக, கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கிளை நிறுவனத்தை திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கௌரவ அதிதியாக பங்கேற்பதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் திறப்பு விழாவைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதான வீதி வளாகத்தில் பொதுக் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எல்.ஜஹான் தெரிவித்தார்.
நாட்டின் வர்த்தகத்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்ற அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் எட்டாவது கிளை நிறுவனமே சாய்ந்தமருதில் திறக்கப்படுகிறது எனவும் இது கிழக்கு மாகாணத்தில் நிறுவப்படுகின்ற முதலாவது கிளை நிறுவனமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவராக கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக அமைச்சர் றிஷாத்தின் விசேட அங்கீகாரத்துடன் இக்கிளை நிறுவனம் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நிறுவப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் எந்தவொரு கிளை நிறுவனத்திலும் அனைத்து அரச, தனியார் காரியாலயங்களுக்குமான தளபாடங்கள், உபகரணங்கள் மற்றும் காகிதாதிகள், வீட்டுத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள், கணனி, லெப்டொப் மற்றும் அவற்றுக்கான உபகரணங்கள், மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், வாகனங்களுக்கான டயர், டியூப், பெட்டரி வகைகள், கட்டிட, உள்ளக அலங்கார பொருட்கள், விவசாய உபகரணங்கள், இரசாயனப் பதார்த்தங்கள், இயந்திர பொறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தர நிர்ணய உத்தரவாதத்துடன் நியாய விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஏ.எல்.ஜஹான் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வை முன்னிட்டு சாய்ந்தமருது நகரம், வரவேற்பு பதாதைகள் மற்றும் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளது.