கொழும்பு, வாழைத்தோட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் பொலிஸ் ஜீப் வண்டியில் என்னைக் கடத்திச் சென்று, தாக்குதல் நடத்தி விட்டு, நடு வீதியில் போட்டுச் சென்றார்கள். இதனால் எனது முதுகுப் பகுதி பாதிக்கப்பட்டு நோயுற்றிருக்கிறேன்.
இது தொடர்பில் விசாரணையொன்றினை நடாத்தி நியாயம் வழங்குங்கள் என ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் பொலிஸ் மா ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட்டரக்க விஜத தேரர் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வட்டரக்க விஜித தேரர் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் நவசமசமாஜக் கட்சியில் விக்கிரமபாகு கருணாரத்னவின் கட்சியில்வுடன் போட்டியிட்டேன். இதன் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி புறக்கோட்டை வாழைத்தோட்டம் அக்பார் பகுதியில் நண்பர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்தேன்.
அன்று பேச்சுவார்த்தை மாலை 7 மணிக்கு ஆரம்பமாகிய சிறிது நேரத்தில் பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் எட்டு பேர் வந்து எனது காவியுடையை இழுத்தெடுத்து தாக்கி அருகிலிருந்த பன்சலையொன்றுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு வைத்து என்னைத் தாக்கி எனது வாக்குமூலம் ஒன்றினையும் பதிவு செய்து கொண்டார்கள்.
பின்பு பொலிஸார் பொதுபலசேனா தேரர்களுடன் என்னை ஜீப் வண்டியில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள். ஜீப் வண்டியில் கொழும்பின் பல இடங்களுக்கு கொண்டு சென்றார்கள்.
ஜீப் வண்டியில் வாழைத்தோட்ட பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியும் இருந்தார். பொலிஸ் அதிகாரி ஜீப் வண்டிக்குள் இருந்து என் மீது தவறான வார்த்தைகள் பிரயோகித்தார். எனது பிரயாணப் பையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள்.
இவரை களனிப் பகுதிக்கு கொண்டு சென்று பாழடைந்த இடத்தில் வெடி வைத்து விடுவோம் என பொலிஸ் அதிகாரி கூறினார். பின்பு ஓரிடத்துக்கு கொண்டு சென்று இங்கு இறங்கு என்று கூறி எனது முதுகில் காலால் உதைத்தார்கள். நான் கீழே விழுந்த பின்பு பொதுபலசேனா குருமார்களும் என்னைத் தாக்கினார்கள்.
பொலிஸ் காவலரணில் இருந்த பொலிஸ்காரர் ஒருவர் முச்சக்கர வண்டியொன்றினை நிறுத்தி கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கூறினார். பின்பு எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து பொலிஸ் ஜீப் வண்டியில் கொழும்பு வைத்தியசாலக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். 72 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டேன்.
அடுத்த தினம் புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வைத்தியசாலைக்கு வந்து எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் தாக்கப்பட்டமையினால் எனது முதுகுப்பகுதி பாதிக்கப்பட்டு நான் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறேன்.
இது தொடர்பில் விசாரணையொன்றினை நடாத்தி நியாயம் வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.