திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மற்றும் கல்லாறு பகுதிகளில் காட்டு யானைகளை விரட்ட வைக்கப்பட்ட யானை வெடி வெடித்ததில் இருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுச் சனிக்கிழமை (15), கந்தளாய் பிரதான வீதியிலுள்ள மங்கிபிரிச் இராணுவ முகாமுக்கு அருகில் வந்த யானையை விரட்டுவதற்காக பயன்படுத்திய யானை வெடி கையில் வெடித்ததில் அம்முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரரான எம்.டபிள்யூ.டி.குமார சன்ன ஜயரத்ன (31வயது) படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள வயலில் வைத்து யானை வெடி தவறுதலாக வெடித்ததில் டபிள்யூ. பி. ஜயவர்தன (52 வயது) என்ற குடும்பஸ்தர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த யானை வெடி, யானையின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்துகின்ற வெடி என்பதும் குறிப்பிடத்தக்கது.