எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை, சாளம்பைக்கேணி - 05 அல்-ஹிக்மா முஸ்லிம் வித்தியாலத்திலிருந்து பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக இம்முறை இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய ஏம்.ஆர்.எம்.அஸ்ஸாம் (169), யூ.எப்.ஷிம்றா (151) ஆகிய இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும் எப்.எப்.பரீனா (147) புள்ளியைப் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்களும் சிறந்த புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் இப் பாடசாலை 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதற்காக அர்ப்பணிப்புடன் இரவு, பகல் பாராது பணியாற்றிய அதிபர் எம்.எச்.பதியுதீன், கற்பித்த ஆசிரியர் ஆகியோர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள், பிரதேச சமூக நல அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த பாடசாலை அமைந்துள்ள இப்பிரதேசமானது பின்தங்கி காணப்படுவதுடன் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும், மேலதிக வகுப்புகளுக்கு கூட செல்லாமலும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனே இந்த மாணவர்கள் சித்திடைவதற்கு காரணம் என பிரதேச கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.