பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் இன்று(5) அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலையில் வீட்டார் படுத்துறங்கிய நேரம் 3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற ரவுடிக் கும்பல் ஒன்றில் பெற்றோல் ஊற்றி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை தீயிட்டுக் கொழுத்தியுள்ளதோடு வீட்டினையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
வாகனங்களை கொழுத்திய அடுத்துஇ எழுந்த தீயினை அவதானித்த வீட்டின் உரிமையாளர் அவலக்குரல் எழுப்பியவாறு வீட்டின் வெளியே ஓடி வந்த வேளையில் தாக்குதல்தாரிகள் வாளுடன் கேற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டவாறு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் சிவன் ஆலய வீதியிலுள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடந்த திங்கட்கிழமை (03) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலில் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் நொருக்கப்பட்டது.
இந்த தாக்குதலை முகத்தைக் கறுப்புத் துணியால் மூடிக்கட்டியவாறு 3 மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவொன்றே மேற்கொண்டு விட்டு சிறிது நேரத்தில் அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.