இலங்கையில் மாடு அறுப்பதனை குறைக்கும் நோக்குடன் வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கான தீர்வை வரி 25 முதல் 15 வீதத்தினால் குறைத்துள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.
புதன்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் மாடு அறுப்பதனை குறைக்கும் நோக்குடன் வெளிநாட்டிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கான தீர்வை வரியினை குறைக்க தீர்மானம் எடுத்துள்ளோம். இதன்பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்காக 30 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கான தீர்வை வரியை 25 முதல் 15 சதவீதம் வரைக்கும் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதேவேளை நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.