பாறுக் ஷிஹான்-
கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வயற்காணிகள் குளங்கள் சட்டவிரோதமாக மண் போட்டு நிரப்பப்படுகின்றன. இந்த நிலைமை கடந்த மாதங்களாக விரைவாக நடைபெற்று வருகின்ற போதிலும் கல்முனை மாநகர சபையினரோ அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அதற்கு உடந்தையாக செயற்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மருதமுனை மேட்டுவட்டை காணி நற்பிட்டிமுனை வயல்காணி சேனைக்குடியிருப்பு வயற்காணி உள்ளிட்ட காணிகள் வேளான்மை செய்கைக்காக பண்டைய காலம் தொட்டு பயன்படுத்தி வரும் இயற்கை வளமான காணிகளாகும். ஆனால் தற்போது அக்காணிகள் தனியாரினால் மண் போட்டு நிரப்பப்பட்டு வீடுகள் தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் தற்போது பெய்து வரும் மழை நீர் கூட தேக்கி வைக்கக் கூடிய குளம் இன்மை காரணமாக வீணாக அந்த நீர் கடலை சென்றடைகின்றது. அத்துடன் சிலர் சட்டவிரோதமாக குறித்த பகுதிகளில் வயல்காணிகளை வாங்கி பொது வாய்க்கால்களை மண் போட்டு நிரப்பியதனால் வெள்ள நீர் தேங்கி பல அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
வழமையாக மழை காலங்களில் வெள்ள நீர் ஒருபகுதி கடலுக்கும் ஒரு பகுதி நீர் மூடப்பட்டு வருகின்ற குளங்களுக்கும் வடிந்து செல்கின்றன ஆனால் தற்போது இக்குளங்கள் நிரப்பப்படும் வேளையில் ஊர்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என பாதிக்கப்படும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் ,வயற்காணிகளின் குளங்கள் இரு மருங்கிலும் கட்டிடங்கள் உடைக்கப்பட்ட கற்களை கொண்டு இரவு வேளையில் ஒருபகுதியை நிரப்பி வருவது மட்டுமல்லாமல் அயலவர்களால் நாளாந்தம் குளத்தினுள் வேலிகள் இடப்பட்டு அரச நிலங்களை தங்கள் பெயரில் காணி உறுதியும் பெற்று வருகின்றமை நடைபெறுகின்றது.
மேலும் குளங்களில் குப்பை கொட்டலாம் என்ற சட்ட விரோத செயற்பாடும் இப்பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. பைகளில் நிறப்ப பட்ட கழிவுகள் உர பைகளில் கட்டப்பட்ட வீட்டுகழிவுகள் ஹோட்டல் கழிவுப் பொருள் பிளாஸ்டிக் போத்தல்கள் உணவுக்காக வெட்டப்பபடும் உயிரினங்களின் கழிவுகளும் குளங்களில் பரவலாக கொட்ட படுகிறது இதனால் சூழல் மாசடைவதுடன் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளன .
மேலும் டெங்கு போன்ற கொடிய நோய் ஏற்பட இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச சுகாதார அதிகாரிகளின் கவனத்தில் கொள்வதுடன் சட்டவிரோத வயல் காணி,குளங்கள் நிரப்பி தனியார் காணிகளாக மாற்றும் நபர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.