எம்.ஜே.எம்.சஜீத்-
மாகாண சபையின் செயற்பாடுகளை மத்திய அமைச்சர்கள் கொச்சைப்படுத்துகின்றனர் என்போர் மாகாண சபை உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை.
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை மத்திய அமைச்சர்கள் கொச்சைப்படுத்துகின்றார்கள் எனக் கூறுபவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளை கைவிட வேண்டுமென கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 64ஆவது சபை அமர்வு (6) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில்; அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளை மத்திய அரசாங்க அமைச்சர்கள் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புறிமை மீறப்படுவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீரினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் நமது கிழக்கு மாகாண சபையினால் மாகாண சபை உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளும் தொடர்ந்தவன்னம் உள்ளது எனவே இவ்வாறான நடவடிக்கைகளையும் நாம் கைவிடவேண்டும்.
நாங்கள் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து கிழக்கு மாகாணத்தில் நிறைவு செய்த அபிவிருத்தித் திட்டங்களை இப்போது நீங்கள் மக்களிடம் கையளிக்கின்றீர்கள் இந்த அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. எனவே மக்கள் பிரதிநிதிகளை புரிந்துணர்வோடு அனுகி அரவனைத்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
கடந்த 2015இல் கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சி மாற்றம்; ஏற்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபையின் பெருந்தொகையான நிதிகளில் நிர்மானிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஒரு குழப்பமான முறையில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இவ்வாறான நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிநிற்கும் நிலையினை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கிழக்கு மாகாண சபை ஒரு பொறிமுறையை கையாளவேண்டும்.
நாங்கள் அமைச்சர்களாக பதவி வகித்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற வைபவங்களின் போது மாவட்ட ரீதியில் மத்திய அரசாங்க அமைச்சர்கள், மாகாண அமைச்சர்களின் பங்கேற்புடன் சிறப்பாக செயற்பட்டோம். அதனாலே எங்கு சென்றாலும் மக்கள்கூட்டம் எங்களை மலர் தூவி மகிழ்ச்சியாக வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆனால் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளில்; மாகாண முதலமைச்சர்; நிகழ்வுக்கு வருவதற்கு முன் மத்திய அரசாங்க அமைச்சர்கள் அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளித்து விடும் நிகழ்வும், அதன் பின்னர் மீண்டும் அதே அபிவிருத்தி திட்டங்களை மாகாண முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும் கையளிக்கும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசாங்க அமைச்சர்களும். மாகாண சபை அமைச்சர்களும் ஆளும் கட்சியில் இருந்து செயற்படுவதனால் மத்திய, மாகாணம் என்ற பிரிவினையின்றி புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாண சபை உருவாக்கி பொது வைபவங்கள் மங்களகரமாக நடைபெறுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபையில் நாங்கள் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சி ஆசனங்களில் அமருந்திருப்பதன் நோக்கம் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அரசியல் கட்சிகள் கௌரவமான முறையில் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் கௌரவமாகவே நிறைவேற்றப்பட வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் எங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு துரோகம் இழைத்ததனால்தான் நாங்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமருந்திருக்கின்றோம்;
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.