கடந்த அரசில் ராணுவத்தினரிடம் இழந்த காணிகளை நல்லாட்சி வந்தும் ஒலுவில் அஷ்ரஃப் நகர மக்களுக்கு விமோசனம் கிடைக்கவில்லை என்பது கவலைக்குரியதாகும். இக்காணிகளை உரியவர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
கட்சித்தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஒலுவில் அஷ்ரஃப் நகர காணிகளை இழந்த மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அத்துடன் நல்லாட்சி அரசையும் குற்றம் சாட்டியுள்ளனர். அரசாங்கம் அம்மக்களின் பிரச்சினையை உடனடியாக தீர்த்து பொது மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என உலமா கட்சி அரசிடம் கோரிக்கை விடுக்கும் அதே வேளை அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் எந்த உரிமையும் வெல்லப்படாமைக்கு காரணம் ஆயிரம் ரூபாய் பணத்துக்கும், போதைகளுக்கும் கட்சி பாட்டுக்களுக்கு மயங்கி ஓட்டு போடும் மக்களும்தான் காரணம் என்பதையும் மக்கள் புரிந்து தெளிவு பெற வேண்டும்.
அதே வேளை இத்தகைய ஆர்ப்பாட்டங்களின் போது உலமா கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டால் அதில் உலமா கட்சி கலந்து கொள்ளும் பட்சத்தில் எங்கே தமது வாக்குகள் பறி போய் விடுமோ என்ற அச்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஏமாற்று கட்சிகள் விழுந்தடித்துக்கொண்டு இப்பிரச்சினையை கவனத்தில் எடுப்பார்கள் என்ற யதார்த்தத்தை யும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் போன்றவற்றின் போது, பலவருடமாக ஒலுவில் மக்களின் பெருவாரியான வாக்குகளைப்பெற்று ஏமாற்றி வரும் முஸ்லிம் காங்கிரஸ் இம்மக்களின் பிரச்சினைகளை தேர்தல் ஒப்பந்தமாக்கியிருக்கலாம். ஆனால் பணத்தையும் பதவியையும் மட்டுமே பேசி இக்கட்சி தனது மக்களை விற்றுவிட்டது. இதே நிலை தொடர்ந்தும் நடக்கிறது என நன்கு தெரிந்தும் இம்மக்கள் தொடர்ந்தும் இக்கட்சியை தலையில் தூக்கி வைப்பது மேலும் மேலும் இவர்கள் மக்களை விற்பதற்கே இட்டுச்செல்லும் என்பதை கடந்த பல வருடங்களாக உலமா கட்சி எச்சரித்து வருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட முஸ்லிம்கள் எம்மோடு ஒன்றுபட முன் வந்தால் எந்தவொரு பதவியையும் பேசாமல் மக்களின் உரிமைகளை மட்டும் பேசி நல்லாட்சிக்கு ஆதரவளிக்கலாம் எனவும்
நாம் பகிரங்கமாக அழைப்பு விடுத்தோம். ஆனால் மக்கள் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றும் கட்சியைத்தான் நாடினர். கடைசியில் பணத்தை பெற்றுக்கொண்டு நல்லாட்சிக்கு ஆதரவளிக்க முன் வந்த கட்சியிடம் ஏமாந்து இன்று நல்லாட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள்.
எம்மை பொறுத்த வரை மக்கள் தாம் வாக்களித்து பிரதிநிதிகளாக்கிய முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் ஏமாற்று தலைமைக்கும் எதிராகவே முதலில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமது தலைக்கு ஆபத்தில்லை என இக்கட்சி இவை பற்றி அலட்டிக்கொள்ளாது தொடர்ந்தும் குறட்டை விட்டு தூங்குவார்கள். அடுத்த தேர்தல் வந்தால் மக்கள் அனைத்தையும் மறந்து இன்னுமொரு ஏமாற்று வார்த்தைக்கு மயங்கி கிழக்கு மக்கள் மீண்டும் தமக்கு வழங்குவர் என்பது இவர்களுக்கு தெரியும். ஆகவே மக்கள் தெளிவு பெற்றால் நிச்சயம் நமது உரிமைகளை பெற முடியும்.