தனது அமைச்சுக்கு உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தவறியுள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் காணப்பட்டாலும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் காணப்படாமையே நாட்டிலுள்ள பிரதான பிரச்சினையாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான பாரிய பொறுப்பை தன்னகத்தே கொண்டுள்ள தமது அமைச்சுக்கு அரசாங்கத்தினால் உரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை எனவும் தனக்கு உரிய வகையில் பணியாற்ற முடியாத பட்சத்தில், தான் பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாத பட்சத்தில் தான் பதவி விலகவும் தயாராகவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது அமைச்சு மிக முக்கியமான பொறுப்பை கொண்டுள்ளமையினால், தனக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.