சுஐப் எம்.காசிம்-
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விஷேட அறிக்கையாளர் ஐஷாக் நதேயா அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான தூதுக்குழு எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் சந்திக்கின்றது.
இலங்கை அரசியலில் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பில் முஸ்லிம்களுக்கு பலத்த சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளமை குறித்து, மக்கள் காங்கிரஸ் சுட்டிக்காட்டுவதோடு இந்த மாற்றங்களினால் முஸ்லிம்களுக்கு அநீதி நடக்க சர்வதேசம் தொடர்ந்தும் துணையாக இருக்கக் கூடாது என்ற முஸ்லிம்களின் நிலைப்பாட்டையும் வலியுறுத்தும்.
முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் சமூகத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலான புள்ளி விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை, ஐ.நா விஷேட பிரதிநிதியிடம் தமது கட்சி சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அக்கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்டீன் தெரிவித்தார்.
யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டும், பூர்வீக இடங்களில் இருந்து துரத்தப்பட்டும் இன்னும் அகதிகளாக வாழும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், சர்வதேசம் அக்கறை காட்டாமல் இருக்கின்றது என்ற விடயத்தை ஐ.நா பிரதிநிதியிடம் தமது கட்சி சுட்டிக்காட்டும்.
இந்திய - இலங்கை ஒப்பந்தம், யுத்த நிறுத்த உடன்பாடு ஆகியவற்றில் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டது போன்று, இனி வரும் காலங்களிலும் எமக்கு எந்த அநீதியும் இழைக்கப்படக் கூடாது என்பதில் சர்வதேசம் உன்னிப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், நாம் அவரிடம் வலியுறுத்தவுள்ளோம் என்று அக்கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.