வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை முறையாக மீளக்குடியமர்த்துவதற்கென அமைக்கப்பட்டிருக்கும் விசேட செயலணியின் செயற்பாடுகளுக்கு வடமாகாண சபை முட்டுக்கட்டடையாக இருக்காமல் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
வடமாகாண முஸ்லிம்களின் பிரஜைகள் அமைப்பு இன்று மாலை (2016.10.28) கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் வடக்கு முஸ்லிம்களின் அபிலாசைகள் தொடர்பிலும் மீள் குடியேற்றம் குறித்தும் ஜனாதிபதி, பிரதமருக்கும் மற்றும் ஜெனீவாவிடமும்; கையளிக்கவென அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் வடமாகாண முஸ்லிம்களின் பிறஜைகள் அமைப்பு மகஜர் ஒன்றை கையளித்தது.
அமைச்சர் இங்கு உரையாற்றிய போது கூறியதாவது:-
26 ஆண்டு காலம் நாம் அகதி வாழ்வில் பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சர்வதேசமோ இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள உலக நாடுகளோ ஜக்கிய நாடுகள் சபையோ அதன் முகவராண்மை நிறுவனங்களோ வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் காட்டவில்லை. காட்டுவதாகவும் தெரியவில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் ஆங்காங்கே சிரியளவில் மேற்கொள்ளப்பட்ட போதும்; அது முழுமையாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் புதிய அரசாங்கம் அமைத்துள்ள அமைச்சரவை உப குழுவின்கீழ் விசேட செயலணி ஒன்று உருவாக்கபட்டடு அதன் செயற்பாடுகள் தொடங்கியுள்ளன.
பழைய அகதிகளை திட்டமிட்டு முறையாகக் குடியேற்றும் வகையில் அமைக்கப்பட்ட இந்த செயலணியின் நடவடிக்கைகளுக்கு வடமாகாணசபை தடையாகயிராமல் ஊக்கமளிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம். வெளியேற்றப்பட்டு கால் நூற்றாண்டுகள் கடந்த நிலையில் இந்த ஒக்டோபர் மாதத்தில் அந்த மாகாணசபையிடம் இவ்வாறு வேண்டுகின்றோம்.
1990ம் ஆண்டு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் இழந்த சொத்தின் பெறுமதி சுமார் 10 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு பின்னர் இதன் பெறுமதி என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இற்றை வரையில் எத்தகைய நஷ்டயீடும் வழங்கப்படவில்லை.
வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று அவர்களின் மனக்குறைகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்துவதற்கான இவ்வாறான பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்துவதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பலஸ்தீன விவகாரத்தில் இலங்கை நழுவல் போக்கை கடைப்பிடித்து வாக்ககெடுப்பில் இருந்து தவிர்ந்து கொண்டமை பற்றி அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது அமைச்சர் கூறியதாவது:-
இலங்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை குறித்து எமது எதிர்ப்பையும் வருத்தத்தையும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் எமது கட்சியின் சார்பாகவும் முஸ்லிம் சமுகத்தின் சார்பாகவும் தெரிவித்துள்ளோம். தனிப்பட்ட முறையில் நான் ஜனாதிபதியை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்து பௌத்த மக்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகம் கூறனேன். அத்துடன் இவ்வாறான சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என்பதில் கவனஞ்செலுத்துமாரும் வேண்டினேன். எமது எதிர்ப்பை எழுத்து மூலமும் வழங்கியுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மகிந்த ராஜபக்கச ஆகியோரின் காலத்திலிருந்தே பலஸ்தீனத்துக்கு ஆதரவாக இலங்கை குரல் எழுப்பி வருகின்றது. மஸ்ஜிதுல் அக்ஷாவை மீட்டெடுக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். தற்போதய ஜனாதிபதியும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார் என அமைச்சர் கூறினார்.
இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் முஸ்லிம் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர் மௌலவி அஸ்ரப் முபாரக் ரஷாதியும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.