பாறுக் ஷிஹான்-
1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற ஆர்வமுள்ளவர்களிற்கு சட்டஆலோசனைகள் மற்றும் வழி காட்டுதல்கள் வழங்கப்படவுள்ளதாக முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவருமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப்பெறுவதற்காக உரியமுறையில் விண்ணப்பித்து சட்டநடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
எனவே மேற்கூறப்பட்ட விபரங்களின் படி பாதிக்கப்பட்டவர்கள் எவராவது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் உடையவர்களாயிருப்பின் தங்களின் காணி தொடர்பான விபரங்களை இல 83 நாவலர் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள மக்கள் பணிமனை அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ இதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தி கிடைக்கச் செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் குறித்த காணிகளை மீட்பதற்குரிய சட்டஆலோசனைகள் மற்றும் வழி காட்டுதல்கள் தொடர்பில் உதவி தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் இச்சந்தர்ப்பத்தை பாதிக்கப்பட்ட சகலரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் மேலும். கேட்டுள்ளார்.