க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களை நம்பி இருந்த முக்கிய தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுத்தது சம்பள உயர்வா அல்லது கட்ட மொய்யா ? (உடலத்துக்கு இறுதியாக வழங்கும் பணம்) என்ற கேள்வியை 19.10.2016 அன்று தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட புதிய சம்பள உடன்படிக்கை ஞாபகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அக்கரப்பத்தனை கிரன்லி கீழ்பிரிவு பகுதி தோட்ட தொழிலாளர்கள் 200ற்கும் மேற்பட்டவர்கள் புதிய சம்பள உடன்படிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது கிரன்லி தோட்டத்தின் தேயிலை கொழுந்து நிறுவை செய்யும் மடுவத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அங்கு தெரிவித்த தொழிலாளர்கள் மேலும் தெரிவித்ததாவது,
450 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்று வந்த எமக்கு பல போராட்டங்களின் மத்தியில் 50 ரூபாவை அதிகரித்துள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை செலவை அதிகரித்துள்ள நிலை உணர்ந்த தலைவர்கள் பெற்றுக்கொடுத்த இந்த சம்பள உயர்வானது உழைக்கும் எங்கள் உடலத்துக்கு எழுதி வைத்த கட்ட மொய்யாகும்.
ஆனால் தொழிலாளர்களாகிய நாங்கள் 150 ரூபாவை கட்ட மொய்யாக வழங்கி வருகின்றோம். எமது உரிமையை காப்பாற்றுவார்கள் என்பதற்காக நாம் மாதம் தோறும் 150 ரூபாவை சந்தா பணமாக செலுத்தி வருகின்றோம். இந்நிலையில் எங்கள் உரிமை காப்பாற்றப்படவில்லை என்பதையும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் உணர்ந்துள்ள நாம் இதுவரை வழங்கி வந்த சந்தா பணத்திற்கு சங்கு அடித்துள்ளோம்.
கிரன்லி தோட்ட தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் அனைத்து தொழிற்சங்கங்களுக்குமான சந்தா பணத்தினை இம்மாதம் முதல் வழங்க மாட்டோம் என்பதற்காக அனைத்து தொழிலாளர்களாகும் கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்து சந்தா நிறுத்த தனித்தனியாக ஒப்பமிட்ட கடிதங்களை தோட்ட அதிகாரிக்கு கையளித்திருப்பதாக தெரிவித்தனர். (கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது)
அதேவேளை தொழிலாளர்களின் சம்பளம் 50 ரூபாவால் கூட்டப்பட்டிருக்கின்ற போதிலும் 18 மாதங்களுக்கான நிலுவை சம்பளத்தை பெற்றுக்கொடுத்திருக்கலாம். இதை தவறவிட்ட தொழிற்சங்கங்கள் உடனடியாக இந்த நிலுவை சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க ஆவணம் செய்யும்படி தொழிலாளர்களால் வழியுறுத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகை மக்களை வதம் செய்த நரகாசூரனை (தொழிற்சங்கவாதி) அழித்தொழிக்க கொண்டாடப்பட்ட திருநாளாகும். அந்தவகையில் தொழிலாளர்களின் உரிமைக்கும் உழைப்புக்கேற்ற ஊதியத்திற்கும் உழை வைத்த நரகாசூரர்களை (தொழிற்சங்கவாதிகளை) எம் மனதில் இருந்து அழித்தொழிக்கும் கறுப்பு தீபாவளியாக கொண்டாடவுள்ளோம்.