முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குள் பல்வேறு தலைவர்களும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் உள்ளே அவர்கள் யாரைச் சந்தித்தனர் என்பது குறித்து ஒரு புகைப்படம் கூட வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக ராகுல் காந்தி வந்து போனது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோவுக்குள் எடுக்கப்பட்டு வெளியான முதல் படங்கள் இவைதான் என்பதால் இந்தப் படங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதுவரை உள்ளே நடப்பது என்ன என்பது தொடர்பாக எந்தப் புகைப்படமும் வெளியானதில்லை. திருமாவளவன் உள்பட பல தலைவர்கள் வந்து போயுள்ளனர். ஆனால் எந்தப் படமும் வந்ததில்லை.இதுகுறித்தும் சர்ச்சை நிலவி வந்தது. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்து போன படத்தையும் கூட யாரும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று அப்பல்லோவுக்கு வந்தார்.
அங்கு அவர் மருத்துவமனை தலைவர் பி.சி ரெட்டி மற்றும் டாக்டர்களைச் சந்தித்தார். அவர்களிடம் முதல்வர் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்களும், மருத்துவமனைக்குள் ராகுல் காந்தி வந்த படமும் தற்போது வெளியாகியுள்ளது.
இதுதான் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க வந்த ஒரு தலைவர் தொடர்பான முதல் படம் என்பதால் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது. அதை விட முக்கியமாக.. இது மட்டும் வெளியானது ஏன் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரித்த பின் ராகுல் காந்தி ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், “முதலமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண நலம் பெறுவார். அவரது உடல் நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். எனது வாழ்த்துகளையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கவே சென்னை வந்து பார்த்தேன்” – என்றார்.
ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காகவே டெல்லியில் இருந்து ராகுல் காந்தி சென்னை வந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.