நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் ஏற்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட குடும்பத்தினர் வாழும் தெற்கு ஹோகந்தர பிரதேசத்தில் மங்கள மாவத்தை இலக்கம் 71 என்ற இடத்தில் உள்ள வீட்டில் இருந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்தார். வீரவன்சவின் வீட்டில் லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற 24 வயதுடைய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் மாமா ஒருவரான பீ.எல்.தயாபால என்பவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லஹிரு முழுமையான வைத்திய பரிசோதனை உட்படுத்தப்பட்டதாகவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகம் கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு விமல் வீரவன்சவின் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என லஹிருவுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் அதனை கருத்தில் கொள்ளாத லஹிரு தொடர்ந்து அங்கு சென்றதாகவும், இதனால் தமக்கு இந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் என்ன செய்வது? என அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் விமல் வீரவன்சவின் மகன் உட்பட அவரது நண்பர்கள் தலங்கம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகளை திட்டி அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். அது தொடர்பில் உயிரிழந்த லஹிருவையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். எனினும் தனது சகோதரியே பிணை பெற்றுக் கொடுத்தார் என லஹிருவின் மாமாக தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கு இன்னமும் முடிவடையவில்லை எனவும், வழக்கு கடுவெல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.