இஸ்ரேல் கண்டனப் பிரேரணை தொடர்பாக வெளிவந்துகொண்டிருக்கும் முகநூல் செய்திகளுக்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய ஆரிப் சம்சுடீன் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது,
17.10.2016ம் திகதியன்று பிரேரணை பேரவைச் செயலகத்திற்கு என்னால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு சில தினங்களுக்குப் பின்னர் மாகாணசபை தவிசாளர் கௌரவ சந்திரதாச கலப்பத்தி அவர்களை வேறொரு நிகழ்வில் சந்தித்தபொழுது எனது பிரேரணை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அது மாகாண அதிகாரவரம்புகளுக்கு அப்பாற்பட்டது எனவும் கூறியிருந்தார்.
அதற்குரிய காரணங்களை எழுத்துமூலம் அறிவிக்குமாறு சபை தவிசாளரை நான் கோரியிருந்தேன். அது நடைபெறாமையினால் மாகாணசபை நிகழ்வு இடம்பெற்ற 27.10.2016ம் திகதியன்று தவிசாளர் வருகைதராமையினால் உப தவிசாளர் கௌரவ என்.இந்திரகுமார் தலைமையில் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபொழுது காலை 11.30 மணியளவில் ஒழுங்குப் பிரச்சினையை நான் சபையில் எழுப்பியிருந்தேன்.
அதற்கு பதிலளித்த உதவித் தவிசாளர் அவர்கள், தவிசாளர் என்ன காரணங்களுக்காக குறித்த பிரேரணை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என்பது தனக்குத் தெரியாது என்றும் மதியவேளையில் கட்சிக்குழுத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவினை அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
மதியநேரம் கூட்டப்பட்ட கட்சிக்குழுத் தலைவர்களின் கூட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து முதலமைச்சர் உட்பட மதியவேளையின் பின்னர் குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுப்பதாக முதலமைச்சரும் பிரதித் தவிசாளரும் எனக்கு அறிவித்திருந்திருந்தனர்.
எனினும் மதியவேளையின் பின்னர் சபையை நடாத்துவதற்கான அதிகுறைந்த உறுப்பினர்கள் (கோரம்) சபையில் இருக்கவில்லை என்பதனால் சபையில் எந்தப் பிரேரணையும் எடுக்கப்படாமல் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.