வவுனியா, பூந்தோட்டம் மற்றும் மாதீனா நகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் நேற்று மாலை ஏற்பட்ட மோதலின் காரணமாக மேலதிக அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீபாவளி தினமான நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியில் மது போதையில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது மதீனா நகர் பள்ளிவாசல் அருகாமையில் குறித்த முச்சக்கர வண்டி தடம்புரண்டது.
இதன்போது அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவியிருந்தனர்.
இதன்போது ஏற்பட்ட சிறு வாய்தர்க்கத்தையடுத்து குறித்த ஆட்டோவில் பயணித்த இளைஞர் குழு பூந்தோட்டம் சந்திக்கு சென்று மீண்டும் மதீனா நகர் வந்து அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டது. இச்சம்பவத்தில் இரு தமிழ் இளைஞர்களும், ஒரு முஸ்லிம் இளைஞரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் மேலும் அசம்பாதிகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மதீனா நகர் பள்ளி வாசல் மற்றும் பூந்தோட்டம் சந்திப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.