பி. முஹாஜிரீன்-
தேசிய விவசாயிகள் வாரத்தினத்தையொட்டி (2016.10.08-15) அம்பாறை பாலமுனை விவசாய கல்லூரியில் விவசாயிகள் வார சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
உதவி விவசாயப் பணிப்பாளரும், விவசாயக் கல்லுர்ரியின் அதிபருமான எம்.எப்.ஏ. சனீர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற விழாவில் அம்பாறை மாவட்டவிவசாயப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. லத்தீப் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
விவசாயப் போதனாசிரியர்கள், விவசாய விரிவாக்கல் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்ர்கள், விவசாய வெளிக்கள உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இவ்விவசாயக் கல்லூரியில் அண்மையில் பெறப்பட்ட வெற்றுக் காணியில் கோடை காலத்தில் மற்றும் மாரிகாலத்தில் பயிரிடக்கூடிய வேளாண்மை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைகள் வெள்ளோட்டமாகப் பயிரிடப்பட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் மர நடுகை நிகழ்வும் கல்லூரி மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஏ.ஆர்.ஏ. லத்தீப் உரையாற்றுகையில், கடந்த வருடம் தமிழ் மொழிமூல விவசாயக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட பாலமுனை விவசாயக் கல்லூரி முன்னேற்றகரமான முறையில் செயற்பட்டு வரகிறது. இக்கல்லூரின் உருவாக்கத்தினால் இப்பிரதேசம் விவசாயத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இங்குள்ள அதிபர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் மாணவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் இங்கு 21 மாணவர்கள் கற்கை நெறியைப் பூர்த்தி செய்ததுடன் இவ்வருடம் 31 மாணவர்கள் இங்கு பயிற்சியைத் தொடர்கின்றனர். இங்கு தேசிய தொழிற்பயிற்சி தரத்திலான என்.வி.கியு மட்டம் 5 சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும். இக்கல்லூரி விவசாயத்திற்கு பொருத்தமான ஒரு பிரதேசத்தில் அமையப் பெற்றிருப்பது சிறப்புக்குரியது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் உரையாற்றுகையில்:-
நல்லாட்சி அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வரும் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு புதிய தொழில்நுட்ப ரீதியிலான விவசாய செய்கையை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இலங்கை சகல வளமும் பொருந்திய ஒரு நாடு இதனை பாதுகாப்பது ஒவ்வொரு பிரஐயின் கடமையாகும் இவ்விவசாய பாடசாலை எதிர்காலத்தில் இலங்கையின் விவசாயத்துறைக்கு பெரும் பங்காற்றும் என்றார்.