சிபான்மை மக்களுக்கெதிராக பல்வேறுபட்ட அநீதிகளை மேற்கொண்ட அரசுக்கெதிராக சிறுபான்மை சமூகத்தின் பங்களிப்புடன் தற்போது நல்லாட்சி அரசு ஒன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரை சார்ந்த அநியாயக்காரர்களை காப்பாற்றி அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சில முஸ்லிம் தலைமைகள் செயற்படும் விதம் நல்லாட்சி அரசின் நம்பிக்கையினை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தெரிவித்தார்.
புதிய காத்தான்குடி அல்-இக்பால் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் 28.10.2016ஆந்திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
முஸ்லிம், தமிழ் மக்களுக்கெதிராக பல்வேறு அநீதிகளை மேற்கொண்ட மகிந்த அரசினை சட்டத்திலிருந்து காப்பாற்றி அவர்களை மீண்டும் இந்த நாட்டின் ஆட்சிபீடத்தில் ஏற்றுகின்ற முயற்சியினை சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். “தற்போது கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகின்றது, மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சியினை கைப்பற்ற போகின்றார்” என்று இத்தகைய மகிந்த ஆதரவாளிகள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இந்த நல்லாட்சி ஏற்படுவதற்கு பங்களிகாளாக செயற்பட்டவர்கள் என்ற வகையில் அத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்கமாட்டோம்.
நல்லாட்சியினூடாக இந்த நாட்டினுடைய அனைத்து துறைகளையும் நல்ல முறையில் செயற்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். போலிஸ், நீதித்துறை, கணக்கியல் போன்ற அனைத்து துறைகளுக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கியிருக்கின்றோம். எனவே இந்த நல்லட்சியினை சீர்குலைக்கின்ற எவருக்கும் நாம் இடமளிக்கக்கூடாது.
மேலும் இந்த பாலர் பாடசாலை மாணவர்கள் நகர் புற பாடசாலை மாணவர்களை விட திறமையுடையவர்கள் என்பதனை இன்று நடந்த இந்த நிகழ்வின் மூலம் நிருபித்திருக்கின்றனர். இத்தகைய மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கென பல்வேறு விடயங்களை முன்னெடுக்கவுள்ளோம். அந்தவகையில் எதிர்வரும் ஆண்டுக்குள் இப்பாடசாலைக்கு ஒரு கட்டிடம், இந்த டிசம்பர் மாதத்திற்கிடையில் இப்பாடசாலைக்கென ஒரு போட்டோ கொப்பி இயந்திரத்தினையும் வழங்கவுள்ளோம், மேலும் இப்பாடசாலைக்கு தேவையான தளபாடங்களையும் ஒதிக்கியுள்ளோம். இந்த மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்கின்ற பிரச்சினைக்கு முடியுமான முயற்சிகளை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதோடு, இவ்வாறு எமது மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதனூடாக சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவுள்ளோம் என தனதுரையில் தெரிவித்தார்.