அஷ்ரப் ஏ சமத்-
ஆறு மாதங்கள் கடந்தும் கொலநாவை, வெள்ளம்பிட்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்ய முஸ்லிம் சமய விவகார அமைச்சு நிதியுதவி வழங்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
மெகொட கொலொன்னாவையில் அமைந்துள்ள அந்நூராணியா பள்ளிவாசலுக்கு ஒரு இலட்சம் பெறுமதியான கட்டிட பொருட்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு கூறினார்கள்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கொலொன்னாவையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 35 பௌத்த விகாரைகள், 04 இந்து கோவில்கள் மற்றும் 16 முஸ்லிம் பள்ளிவாசல்கள் சேதமடைந்தன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 27134 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. அதற்காக அரசாங்கத்திற்கு விசேடமாக நன்றி தெரிவிக்க வேண்டும். கௌரவ பிரதமர் அவர்கள் மூன்று முறை இப்பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட்டார். குடும்பங்களை மேம்படுத்துவதற்காக இவ்வாறான உதவிகளை அரசு வழங்கும் அதே சமயம், நாட்டில் சமய நல்லிணக்கம் அவசியமென அரசு கருதுகிறது.
எனவே, மக்களை சமய ரீதியாக மேம்படுத்துவதற்காக மதஸ்தலங்களை மேம்படுத்தும் பொறுப்பை அரசு தன்னகத்தே கொண்டுள்ளது. தொகுதி உறுப்பினர் எனும் முறையில் 35 பௌத்த விகாரைகளுக்கு நிதியுதவி வழங்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன்.
இரண்டு வாரங்களில் அந்நிதி வழங்கப்பட்டது. இந்து சமய விவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் ஒரு இந்து கோயிலுக்கு ஒரு இலட்சம் வீதம் 4 இந்து கோயில்களுக்கு நிதியுதவி வழங்கினார். பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்குமாறு முஸ்லிம் விவகார அமைச்சரிடமும் கோரினேன். ஆனால் இன்று வரை கிடைக்கவில்லை என்பதை மனவேதனையுடன் கூறு வேண்டியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் அவர்களுக்கும், செயலாளர் அவர்களுக்கும் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக பலமுறை கோரிக்கை விடுத்தேன். எந்த பிரதிபலனும் கிடைக்கில்லை. முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய சமய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவே முஸ்லிம் சமய விவகார அமைச்சு அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பள்ளிவாயில்களுக்கு சென்று அவர்களுடைய சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம் சமய மற்றும் கலாசார அமைச்சில் நடைபெறும் நடவடிக்கைகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மஹிந்த ராஜபக்ஸ அவர்களை முஸ்லிம்கள் மறுத்த போதிலும் அக்காலத்தில் ஹஜ் கடமைக்காக அனுமதிக்கப்படும் கோட்டாவை சவுதி அரசருடன் பேச்சுவார்த்தை நடாத்தி மூலம் மேலதிகமாக 400றை பெற்றுக் கொண்டார். ஏங்களது நாட்டை உலகத் தலைவர்கள் விரும்புகிறார்கள். எனினும் அதன் நனமைகளை கூட இந்த அமைச்சரால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதலால் அமைச்சு நடவடிக்கைகளை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ளுமாறு நான் முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார அமைச்சை கேட்டுக் கொள்கிறேன்.