23 முஸ்லிம் சிவில் அமைப்புகளின் அறிக்கை பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்
கடந்த 11.11.2016 அன்று முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று RRT அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையில் தெஹிவலையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகமும், சிவில் அமைப்புகள் சார்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை, தேசிய ஷுரா சபை, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம், மற்றும் YMMA பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறித்த சந்திப்பில் GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டம் மற்றும் அதில் பேசப்பட்ட விஷயங்கள் தொடர்பிலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதை பற்றியும் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயல்படுத்துவது என்பது பற்றியும் பேசப்பட்டது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும், தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்களும்.
சந்திப்பின் ஆரம்பமாக முஸ்லிம் சிவில் அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டவர்களினால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக முக்கிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
முதலாவது சமுதாயப் பிரச்சினைகளின் போது தவ்ஹீத் ஜமாஅத் மற்ற சிவில் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றாமல் தனித்தே செயல்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இரண்டாவது கடந்த 03.11.2016 அன்று நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் பேசப்பட்ட உரையில் ஞானசார தேரர் தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் தவறானவை. எனவே அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் கலந்து கொண்ட சிவில் அமைப்புகள் சார்பில் முன்வைக்கப்பட்டது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களில் முதலாவது குற்றச்சாட்டு தொடர்பில் ஆரம்பமாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இணைந்து செயல்பட மறுத்தது யார்?
சமுதாயப் பிரச்சினைகளின் போது சமுதாய இயக்கங்கள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தும் தயாராக இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் ஒன்றினைந்து செயல்படுவதற்கான சந்தர்பங்கள் ஏற்பட்டும் அதனை துண்டித்துக் கொண்டது, அல்லது சந்தர்பத்தை பயன்படுத்தாமல் வேண்டும் என்றே புறக்கணித்தது யார்? தவ்ஹீத் ஜமாஅத்தா? அல்லது மற்ற அமைப்பினரா? அல்லது ஜம்மிய்யதுல் உலமாவா?
முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக அனைத்து முஸ்லிம் இயக்கங்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து பொது பல சேனா மற்றும் இன்னும் பிற இனவாத இயக்கங்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்த நேரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றினைந்து கடந்த 2013ம் ஆண்டு ரன்முத்து ஹோட்டலில் ஓர் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நாட்டில் நிழவியிருந்த இனவாத சூழல் குறித்தும் முஸ்லிம்கள் முகம் கொடுக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் (அப்போதைய) ஜனாதிபதியை சந்தித்து விளக்கம் அளித்து இனவாதிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைப்பது என்றும், இனவாத செயல்பாடுகள் தொடர்பிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றை நடத்தி பதிலளிப்பது என்றும் இனிவரும் காலங்களில் இனவாதத்திற்கு எதிராகவும் முஸ்லிம் சமூக பிரச்சனைகளிலும் அனைத்து அமைப்புகளும் இணைந்து செயலாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், நடந்தது என்ன? குறித்த சந்திப்பில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் நடைமுறைப் படுத்தப்பட வில்லை. ஜனாதிபதியை சந்திக்கவும் இல்லை. ஊடக சந்திப்பு நடத்தவும் இல்லை. தொடர்ந்தும் இனவாதத்திற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்கவும் இல்லை. முடிவுகள் கிடப்பில் போடப்பட்டன.
பிறகு நாங்கள் ஒவ்வொரு அமைப்பையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினோம். நாம் ஏற்படுத்திய ஒப்பந்தம் குறித்து நினைவூட்டி சமூக பிரச்சனைகளை ஒன்றான இணைந்து தீர்வு காண்போம் என்று ஒவ்வொரு அமைப்பின் அலுவலகங்களுக்கு சென்று வினயமாய் வேண்டினோம். ஒவ்வொரு அமைப்பும் பதிலளித்த விதம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா – சந்திக்க திகதி தருவதாக தொடர்ச்சியாக ஏமாற்றினர்.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி – நாங்கள் எங்கள் முடிவுப்படி செயல்படுகிறோம். நீங்கள் உங்கள் முடிவுப்படி செயல்படுங்கள் என்றார்கள்.
ஜமாஅதே இஸ்லாமியின் ஹிரா பவுன்டேஷன் – எங்கள் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றனர்
நிதா பவுன்டேஷன் - தலைவர் உம்ரா சென்றுள்ளார். இலங்கை வந்த பிறகு அறிவிக்கிறோம் என்றனர்.
ஜமாஅதுல் அன்ஸாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யா – ஆரம்பத்தில் நல்ல முயற்சி என்றனர். பிறகு தலைவர் தவ்ஹீத் ஜமாஅத்தை சந்திக்க விரும்பவில்லை என்றனர்.
ஜம்இய்யதுஷ் ஷபாப் – எங்கள் பிரச்சனையை பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்து விட்டோம் என்றனர்.
முஸ்லிம் கவுன்ஸில் & முஸ்லிம் மீடியா போரம் – நாங்கள் என்ன தான் செய்ய? இப்படி தான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் கூடுகிறோம். கலைகிறோம். தவ்ஹீத் ஜமாஅத் ஏதாவது செய்யுங்கள் என்றனர்.
இவ்வாறு முதலில் அனைத்து கூட்டமைப்புகளும் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை பச்சையாக மீறியவர்கள் யார்? நாங்களா? கூட்டமைப்பில் உள்ளவர்களா? இதை யாரும் மறுப்பார்களா?
அந்த நேரத்தில் ஹழால் பிரச்சினை தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. அப்போது தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையுடன் சந்திப்பொன்று நடத்துவதற்கும் ஹழால் பிரச்சினை தொடர்பில் இணைந்து செயல்படுவதற்கும் முயற்சி மேற்கொண்டு அவர்களுடனான சந்திப்புக்கு நேரம் கேட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது. இன்றே பேசி நேரம் தருகிறோம் என்றவர்கள் இதுவரை அது பற்றி பதிலளிக்க வில்லை.
அடுத்ததாக, ஹழால் சான்றிதழ் வழங்குவதை ஜம்மிய்யதுல் உலமா சபை கைவிடப் போகிறது. என்கிற செய்தி கிடைத்த நேரத்தில் அது பற்றி அவசரமாக ஜம்மிய்யாவுடன் பேச வேண்டும் நேரம் தாருங்கள் என்று கேட்ட போதும் நாளை சந்திக்கலாம். நேரம் தருகிறோம் என்றவர்கள் கடைசி வரை எம்மை சந்திக்க வில்லை.
இது போல், தம்புள்ளை பள்ளி பிரச்சினை, கிரேன்பாஸ் பள்ளி பிரச்சினை, மத்ரஸாக்களுக்கு எதிரான பிரச்சினை, ஹபாயா பிரச்சினை, குறிப்பாக ஜம்மிய்யதுல் உலமாவின் ஹழால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்ட நேரத்தில் எல்லாம் இது பற்றி விரிவாக கலந்துரையாடுவதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சந்தர்ப்பம் கேட்டது. சமுதாயப் பிரச்சினைகளில் இணைந்து தொடர்ந்து பயணிக்க விரும்பியது. நாம் விரும்பிய நேரத்தில் எல்லாம் எம்மை புறக்கணித்தது அப்போதைய கூட்டு தலைமைத்துவமாக இருந்த ஜம்மிய்யதுல் உலமா சபை.
இறுதியாக, குர்ஆன் தொடர்பில் விவாதிக்க வருமாறு முஸ்லிம்களை இனவாதிகள் அழைத்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் குறித்த விவாத அழைப்பை ஏற்றுக் கொண்டது. தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க வர முடியாது என்று பொது பல சேனாவினர் மறுத்து ஜம்மிய்யதுல் உலமா சபையுடன் தான் விவாதிப்போம் என்று அறிவித்த நேரத்தில் “ஜம்மிய்யதுல் உலமா சபை சார்பில் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உலமா சபை சார்பில் தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய நாங்கள் விவாதத்தை நடத்தித் தருகிறோம் என்று கூறி ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பகிரங்க கடிதத்தை நாம் எழுதினோம்.
கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள், விரைவில் சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்று பதிலும் அனுப்பினார்கள். ஆனால் இது வரை குறித்த கடிதத்திற்கான சந்திப்புக்கள் எதுவும் நடத்தப்பட வில்லை.
சமூக பிரச்சினைகளின் போது ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்று நாம் விரும்பிய போதெல்லாம் எம்மை புறக்கணித்தது கூட்டமைப்பே தவிர நாம் புறக்கணிக் வில்லை என்பது தெளிவாக விளக்கப்பட்டது.
தவறை ஒப்புக் கொண்ட கூட்டமைப்பு பிரதிநிதிகள்
தவ்ஹீத் ஜமாஅத்தின் குறித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது உண்மைதான். நீங்கள் புரக்கணிக்கப் பட்டுள்ளீர்கள். இது பற்றி இன்று தான் முழு விளக்கம் எமக்குத் தெரிய வந்தது. இது எமது தலைமைகளின் தரப்பால் நடந்த பிழையே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தின் பிழையல்ல என்பதை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள்.
கலந்துரையாடலின் எந்த முடிவையும் செயல்படுத்தாத கூட்டமைப்பு.
இதே நேரம், என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் வாருங்கள் கலந்துரையாடுவோம் என்று அழைத்து கலந்துரையாடல் செய்கிறீர்கள் என்றைக்காவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப் படுத்தியது உண்டா?
இதுவரை கலந்துரையாடல் செய்து கூட்டமைப்பு செயல்படுத்தும் ஒரே விடயம் அறிக்கை வெளியிடுவது மாத்திரமே தவிர வேறு என்ன செய்துள்ளீர்கள்? என்ற கேள்வி தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் முன் வைக்கப்பட்டது.
முடிவை செயல்படுத்தாமை சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் நோய்
எடுக்கும் முடிவுகளை செயல்படுத்தாமல் வெறும் அறிக்கை வெளியிடுவதை மாத்திரமே பெரும் பணியாக செய்து கொண்டிருப்பது நியாயமா? என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் கேள்விக்கு பதிலளித்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மையானது. முடிவுகள் எடுப்பதற்காக கூடுவதும், எடுத்த முடிவை செயல்படுத்தாமல் கிடப்பில் போடுவதும் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் நோயாக இருக்கிறது. அது எமது தரப்பின் பிழை தான் என்பதை தெளிவாக ஒப்புக் கொண்டது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு.
ஆர்பாட்டத்தில் இனவாதிகள் குறித்து பேசப்பட்ட விடயங்கள் தவறானதா?
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமான ஒரு குற்றச்சாட்டு ஆர்பாட்டத்தில் இனவாதிகள் தொடர்பில் பேசப்பட்ட விடயங்களாகும்.
இந்தக் குற்றச்சாட்டை சமூக வலை தளங்களை காரணம் காட்டியே கூட்டமைப்பு முன்வைத்தது. உண்மையில் குறித்த ஆர்பாட்டத்தில் இனவாதிகள் பற்றி பேசப்பட்டதை உளப்பூர்வமாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தவறு என்று சொல்லவே இல்லை.
எந்தளவுக்கு என்றால், நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றுக்கு பல முறை இனவாதிகளுக்கு எதிரான பேச்சு தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதிநிதிகள் குறித்த பேச்சை பாராட்டியே பேசினார்கள்.
“எல்லோரின் மனதிலும் இருந்ததை நீங்கள் பேசினீர்கள். அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி தொடர்ந்தும் பேசி வரும் ஞானசார தேரருக்கு எதிராக இப்படி யாராவது பேசமாட்டார்களா? என்று நாங்கள் நினைத்திருந்த நேரம் நீங்கள் பேசினீர்கள். நேரடி ஒளிபரப்பை பேஸ்புக்கில் பார்த்துக் கொண்டிருந்த நாம் எம்மை அறியாமலேயே அல்லாஹ்வு அக்பர் என்று தக்பீர் சொல்லி விட்டோம். அந்தளவு பாராட்டத் தக்க ஒரு உரையாக அந்த உரை அமைந்தது” என்றெல்லாம் பாராட்டினார்களே தவிர யாரும் இனவாதிகளுக்கு எதிரான பேச்சை குறை சொல்ல வில்லை.
இதே நேரம் குறித்த பேச்சை குறை கண்ட ஒரு சிலர் மார்க்க அடிப்படையில் அடுத்தவர்களின் மதங்களையும், கடவுள்களையும் திட்டக் கூடாது என்கிற கருத்துப்பட குர்ஆன் வசனங்களை ஆதாரம் காட்டி பேசினார்கள்.
குறித்த வாதத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் தெளிவாக பதிலளிக்கப்பட்டது.
இஸ்லாம் அடுத்தவர்களின் மதங்களை நிந்திப்பதை தடுக்கிறது. அடுத்தவர்களின் கடவுள்களை நிந்திப்பதை தடுக்கிறது. என்பது உண்மை தான். அதற்குறிய ஆதாரங்களை தான் நீங்கள் முன் வைத்தீர்கள். ஆனால் குறித்த ஆதாரங்களுக்கும் நாம் பேசியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாம் பௌத்த மதத்தையோ, அவர்களின் கடவுள்களையோ நிந்தித்துப் பேசவே இல்லை. மாறாக ஞானசார தேரர் என்பவர் அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தொடர்ந்தும் அவதூராக பேசி வருவதற்கு எதிராக அவருக்குத் தான் பதில் சொல்லப்பட்டது.
ஞானசார தேரருக்குத் தான் குறித்த ஆர்பாட்டத்தில் பதில் பேசப்பட்டதே தவிர. பௌத்த மதத்தை இழிவு படுத்தியோ, அவர்களின் கடவுள்களை நிந்தித்தோ எவ்விதமான கருத்துக்களும் பேசப்பட வில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மதங்களை நிந்திந்தும், மற்ற கடவுள்களை நிந்தித்தும் பேசக் கூடாது என்று தடுத்த இஸ்லாம் அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் இழிவு படுத்துகிறவர்களுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்க சொல்கிறது என்பது பற்றி குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் படி தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டதுடன், நபிமார்கள் பேசிய வார்தைகளையும் மேற்கோள் காட்டி விளக்கம் சொல்லப்பட்டது.
நமது இந்த விளக்கத்தினை பிரதிநிதிகள் குழு ஏற்றுக் கொண்டதுடன், ஞானசாரவுக்கு எதிராக பேசியதை குறை கண்டதையும் நிறுத்திக் கொண்டார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தினால் தான் இனவாதம் உண்டாகியதா?
கடந்த 03.11.2016 அன்று தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டத்தின் பின்னர் நாட்டின் சில இடங்களில் பள்ளிகள் தாக்கப்பட்டதாகவும் இதற்கு யார் பொருப்பெடுப்பது என்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தரப்பில் ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் தெளிவாக பதிலளிக்கப் பட்டது.
இலங்கையில் இனவாதம் எவ்வாறு உண்டானது? அதற்கு காரனம் யார்? இதற்கு முன் உடைக்கப்பட்ட பள்ளிகள் எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தினால் தான் உடைக்கப்பட்டதா?
தம்புள்ளை பள்ளி உடைக்கப்பட்டதே!, மஹியங்கனை பள்ளி மூடப்பட்டது, கிரேன்பாஸ் பள்ளி மூடப்பட்டது, தர்காநகரில் கலவரம் ஏற்பட்டது இவையெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தினால் ஏற்பட்டதா? அல்லது ஜம்மிய்யதுல் உலமாவின் ஹழால் சான்றிதழ், இஸ்லாமிய வங்கி முறை போன்றவற்றை காரணம் காட்டி ஏற்பட்டதா? ஜம்மிய்யதுல் உலமாவினை காரணம் காட்டி ஏற்பட்டால் கூட அதற்கு ஜம்மிய்யா தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அது அறிவுடமையாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இனவாதிகள் ஆரம்ப நாள் முதல் ஏதாவது ஒன்றை காரணம் காட்டி இனவாதத்தை தூண்டுகிறார்கள் என்பது தான் உண்மை என்பதை புரிய வைத்தோம்.
இதற்கும் மேலதிகமாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு வேறு ஒன்றும் பேச வில்லை.
பெரும்பான்மை மக்களை சமாதானம் செய்வது எப்படி?
இனவாதிகளுக்கு எதிராக யாராவது காட்டமாக பேச மாட்டார்களா என்று அனைவர் மனதிலும் இருந்த ஆதங்கம் தான் உங்கள் வழியாக ஆர்பாட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அதனை ஒப்புக் கொள்கிறோம். இதே நேரம் பெரும்பான்மை மக்களில் இந்த உரையினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களை சமாதானம் செய்வது எப்படி? என்ற விடயம் கலந்துரையாடப் பட்டது.
குறித்த கலந்துறையாடலில், இனவாதிகளுக்கு ஆதரவானவர்கள் தான் சமூக வலை தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியும், எழுதியும் வருகிறார்கள். பொதுவான மக்களுக்கு மத்தியில் இதன் தாக்கம் வெளிப்பட வில்லை. சமூக வலை தளம் என்பது ஒரு மாயை உலகமே தவிர நூறு சதவீத உண்மை உலகம் அல்ல. ஆகவே இவைகளுக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை. என்று ஏகோபித்த முடிவெடுக்கப்பட்டது.
இதே நேரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூட்டமைப்புடனான இன்றைய சந்திப்புக்கு முன்பாகவே விளக்கமளித்த ஒரு வீடியோ சிங்களத்திலும், தமிழிலும் வெளியிடப் பட்டுள்ளது. அதுவே இனவாதிகளுக்கு போதுமான பதிலாகும். மீண்டும் மீண்டும் தவ்ஹீத் ஜமாஅத் தரப்போ, அல்லது கூட்டமைப்போ எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடத் தேவையில்லை என்று தெளிவாக முடிவெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தரப்பினால் பேசப்பட்ட விடயங்கள் குர்ஆன், சுன்னா அடிப்படையிலும் தர்க்க ரீதியாகவும் சரியானதுதான். மனதளவில் அனைவரின் உள்ளத்தில் இருப்பதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேசப்பட்டது. இது தொடர்பில் பெரும்பான்மை மக்களுக்கு தெளிவூட்டி எவ்வித அறிக்கைகளும் வெளியிடத் தேவையில்லை என்ற முடிவுக்கு ஒத்த கருத்தில் அனைவரும் வந்தது மட்டுமன்றி இதன் முடிவுகளை எழுதிக் கொள்ளுங்கள் என உலமா சபை சார்பில் குறிப்பெடுக்க நியமிக்கப்பட்ட சகோதரருக்கு குறித்த மஷுராவை வழிநடத்திய சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் கட்டளையிட்டு அவரும் இதனை குறித்துக் கொண்டார்..
ஆக மொத்தத்தில், தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் முன் வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் பதிலளிக்கப்பட்டு அவற்றை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டதுடன், தொடர்ந்தும் சமுதாய விடயங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தையும் இணைத்துக் கொண்டு செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
முடிவை மாற்றியது யார்?
தவ்ஹீத் ஜமாஅத்தையும் இணைத்துக் கொண்டு சமுதாய விடயங்களில் பங்களிப்பு மேற்கொள்வதுடன் நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பில் அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டு சென்ற கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், கூட்டமைப்பின் மற்ற அங்கத்தவர்களும் 1.11.2016 (வியாழக்கிழமை) ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார்கள்.
குறித்த சந்திப்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் எட்டப்பட்ட முடிவுகள் தூக்கியெறியப்பட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டே ஆகவேண்டும் என்று அங்கிருந்த ஒரு சிலர் விடாப்பிடியாய் இருக்க, தவ்ஹீத் ஜமாஅத்துடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் எவ்வித அறிக்கையும் வெளியிட முடியாது என்று அங்கிருந்த இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்த நிலையில் இறுதி முடிவாக தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரை பயன்படுத்தாமல் அறிக்கை வெளியிடுவது என்ற முடிவுக்கு வந்தது கூட்டமைப்பு.
அறிக்கை வெளியிடுவதில்லை என்ற கூட்டு மஷுராவை உடைத்து விட்டு ஏதாவது ஒரு அறிக்கையை வெளியிட்டே தீருவது என்ற முடிவு எட்டப்பட்டு அந்தத் தகவல் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எத்தி வைக்கப்பட்டது.
சிங்கள மக்களை அமைதிப்படுத்த தமிழில் அறிக்கை விட்ட கூட்டமைப்பு
ஆர்பாட்டத்தில் பேசப்பட்ட பேச்சினால் சிங்கள மக்கள் கொதித்துப் போயிருப்பதாகவும், அவர்களை அமைதிப்படுத்தவே தாம் அறிக்கை வெளியிடப் போவதாகவும் கூறியே 23 அமைப்புகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால் அறிக்கை சிங்கள மொழிக்கு பதிலாக தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கள மக்களை அமைதிப்படுத்த தமிழ் மொழியில் அறிக்கை விடும் சூத்திரத்தை எங்கிருத்து கூட்டமைப்பு கற்றுக் கொண்டதோ தெரியவில்லை. அல்லது, சிங்கள மக்களும் இவர்கள் எழுதும் தமிழை புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தார்களோ புரிய வில்லை.
வெளியிடும் அறிக்கை சிங்கள மக்களுக்கானது என்றால் அதனை ஏன் தமிழில் வெளியிட வேண்டும்? குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது வெளியிட்டிருக்கலாமே?
ஆக, இவர்களின் அறிக்கை வெளியிடும் ஆர்வம் சிங்கள மக்களுக்கானது அல்ல. தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கானது என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. முஸ்லிம்களுக்கான தமது முகத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்துவதற்கான முன்னெடுப்பே இந்த அறிக்கையாகும்.
கலந்து கொள்ளாதவர்கள் கையெழுத்திட்டதாக அறிக்கையில் சொல்லியது ஏன்?
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக 23 அமைப்புகள் சேர்ந்து கெயெழுத்திட்டு அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்று பத்திரிக்கை செய்திகள் குறிப்பிடுகின்றன. நாம் அறிந்த வரை இதிலும் ஒரு பித்தலாட்டே விளையாட்டே அறங்கேறியிருக்கிறது.
10.11.2016 அன்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூடிய கூட்டமைப்பின் மஷுராவில் சுமார் 10க்கு உட்பட்ட இயக்கத்தவர்களே கூடியிருந்தார்கள். அதிலும் சிலர் இரண்டு இயக்கங்களுக்கு பொறுப்பாளர்கள். இப்படியான ஒரு நிலையில் தான் குறித்த அறிக்கை தயாரிக்கபட்டது மட்டுமன்றி கையெழுத்திடாமலேயே அறிக்கையும் வெளியிடப்பட்டது.
எந்தளவுக்கென்றால் குறித்த மஷுராவில் கலந்து கொண்டதற்கான கையெழுத்தைக் கூட குறித்த இயக்கத்தவர்கள் இடவில்லை என்பது மேலதிகமாக நமக்குக் கிடைத்த தகவலாகும்.
ஆக மொதத்தில் யாரோ ஒரு சிலரின் தேவைக்காக கூட்டமைப்பு வலிந்து அறிக்கை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தின் வலுவையும், மக்களிடம் ஏற்பட்ட வரவேற்பையும் குறைத்து, குறை சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது என்பது தெளிவாகிறது.
இந்த அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட, குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத்துடனான சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் நல்ல நோக்கங்கள், மற்றும் முயற்சிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்வதுடன், உங்கள் முயற்சிகளை வீனாக்கி, இணைந்து செயல்பட நீங்கள் செய்த முயற்சிகளையும் தவிடு பொடியாக்கிய சிலரின் தீய எண்ணங்களை அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி விடுமாறு வினயமாய் கேட்டுக் கொள்கிறோம்.