காரைதீவு சகா-
கிழக்கு மாகாணத்தில் போட்டிப்பரீட்சையில் தெரிவான 11 விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை வெகுவிரைவில் நடாத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படவிருப்பதாக கிழக்குமாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
விளையாட்டு உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப்பரீட்சை கடந்த யூலை மாதத்தில் நடாத்தப்பட்டது. கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இப்பரீட்சையை நடாத்தியிருந்தது.
கிழக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கிழக்குமாகாண விளையாட்டுத்திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள விளையாட்டு உத்தியோகத்தர் தரம் 3 (தொழில்நுட்பம்) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கு 2014இல் பிரதேச செயலக ரீதியாக விண்ணப்பம் கோரப்பட்டது.
அதன்படி 19.09.2015 இல் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டது. அப்பரீட்சையில் 11பேர் சித்தியடைந்தார்கள். 09பேர் தமிழ்மொழிமூலமும் 02பேர் சிங்களமொழிமூலமும் தெரிவானார்கள்.
இப்பரீட்சை பெறுபேறு கடந்த யூலைமாதம் வெளியிடப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதமை குறித்து எமது ஊடகவியலாளர் வேதசகா அமைச்சர் தண்டாயுதபாணியிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் விரைவாக நேர்முகப்பரீட்சையை நடாத்தி நியமனம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தனது அமைச்சின் செயலாளர் அசங்கஅபேவர்த்தனவிற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
பெரும்பாலும் ஜனவரியில் அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.