வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்று, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கோரினார்.
இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தை நிறைவுசெய்து, இன்று வெள்ளிக்கிழமை மாலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றினார். அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய, வரவு-செலவுத் திட்டத்துக்கான அங்கிகாரத்தை கோரினார்.
இதன்போது எழுந்த அநுர குமார திஸாநாயக்க, வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு தேவையென்றும், பெயர் குறிப்பிட்டே வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 162 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், வரவு- செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.