பாறுக் ஷிஹான்-
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில்; நவீன விதை சுத்திகரிப்பு நிலையம் இன்று வியாழக்கிழமை (18.11.2016) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்துக்கென16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதோடு தூய விதைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கான விதை நெல்லை இச்சங்கமே குறைந்த செலவில் சுத்திகரித்து வழங்கும் நோக்கில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஊடாக விதை சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டம் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டிடங்களை அமைக்க 11.6 மில்லியன் ரூபாவையும், சுத்திகரிப்பு இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய 4.4 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளது. இந்நிதிக்கு மேலதிகமாக பயிற்சி வகுப்புக்களுக்கென 0.5 மில்லியன்ரூபாவையும் விதை சுத்திகரிப்புக்குத் தேவைப்படும் பொருட்களின் கொள்வனவுக்கு 1 மில்லியன் ரூபாவையும் வழங்கி உள்ளது. அத்தோடு விதை சுத்திகரிப்பு நிலையத்தை சிறப்பாக நடாத்துவதற்கான முகாமைத்துவ ஆலோசனையை கைத்தொழில்பணியகத்தின் மூலம் வழங்கியுள்ளது.
விதை சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் ஆகியோரும்,மத்திய விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் ஒரு வருடத்துக்கு முன்பாக, கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் 24ஆம் திகதி அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் நாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.