ஹைதர் அலி -
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஏறாவூர் அலிகார் பாடசாலைக்கான கணணி ஒளிபரப்பு மற்றும் ஒலியில் சாதனங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் ஆகியோர் கலந்து கொண்டதோடு, பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாடசாலைகளின் தேவைகளை இனங்கண்டு மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு உதவித்திட்டங்களின் ஒரு கட்டமாகவே அலிகார் பாடசாலையின் மிக நீண்டகால தேவைப்பாடாகக் காணப்பட்ட 90,000.00/= (தொன்னுறாயிரம்) ரூபாய் பெறுமதியான கணணி, ஒலியியல் சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாரூக்
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அதிகாரங்களை விடவும் சிறந்த கல்வியின் மூலமே தன்னிறைவுள்ள சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும். துரதிஸ்ட வசமாக எமது முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் பிழையான வழிகாட்டுதல்களால் குறுகிய கால கற்கைநெறிகளை பூர்த்தி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்ற ஒரு நிலைமை எமது மாணவர்கள் மத்தியிலே உருவாகியிருக்கின்றது. இவ்வாறு முறையான கல்வியினை கற்காததன் விளைவாக எமது நாட்டின் நிர்வாக ரீதியான அதிகாரிகள் பல துறைகளிலும் எமது சமூகத்தவர்கள் பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்றது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் பெரும் சொத்துக்களுடன் வாழ்ந்த எமது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டபோது ஒரே நாளில் அவர்களது சொத்துக்கள் அனைத்தும் பறிபோனது. ஆகவே பொருளாதார பலத்தின் மூலம் மாத்திரம் ஒரு சமூகம் உயர் நிலையை அடைய முடியாது, கல்வி மாத்திரமே என்றும் அழியாத சொத்தாகும். அத்தகைய கல்வியினை எமது மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்குரிய அனைத்து விடயங்களையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போது நாட்டில் நல்லதொரு சூழல் ஏற்பட்டு பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இச்சந்தர்பத்தை உரிய முறையில் பயன்படுத்தி முறையான கல்வியுடன் கூடிய சிறந்த சமூகமாக உருவாகுவதற்கு மாணவர்களாகிய நீங்கள் மிகவும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தெனதுரையில் தெரிவித்தார்.