நேற்று முன்தினம் நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் வரவு செலவு விவாதத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையில் சில விடயங்கள் சிறுபான்மையினரை கவலையயுடைய செய்துள்ளதுடன் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்கள் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்துக்களில் நல்ல விடங்களும் இருக்கின்றன. ஆனாலும் சில விடயங்கள் பொறுப்பற்ற முறையில் இருந்தது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இலங்கையையைச் சேர்ந்த 4 குடும்பங்களின் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். இல் அங்கம் வகிப்பதாக வந்துள்ள செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியானதாகும். இலங்கையில் மாத்திரமல்ல ஏனைய நாடுகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. வழமைபோல இணையதளங்கள் இது பற்றி செய்தி வெளியிட்டிருக்கின்றன.
முஸ்லிம் பாடசலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வருகின்ற ஆசிரியர்கள் பயங்கரவாதத்தை தூண்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலை அமைச்சர் எவ்வாறு எடுத்தாரோ, அல்லது யார் அவருக்கு வழங்கினாரோ தெரியவில்லை. அது முற்றிலும் பிழையானதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான தகவலாகும். ஒரு அமைச்சர் ஒரு விடயத்தினை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தாமல் சிறுபான்மை சமூகத்தினை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை கூறுவது குறித்த சமூகத்தினை அச்சம் கொள்ள செய்துள்ளது.
இதுபோன்ற செய்திகளை இருட்டடிப்புச் செய்து எமது மக்கள் மத்தியில் வீன் ஊசலாட்டங்களையும் பீதியையும் உண்டுபன்னாமல் ஊடகங்கள் பொறுப்படன் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.