தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆர்ப்பாட்டம் ஏன்..? எதற்கு..?

GSP+ வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பாக, திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜரோப்பிய ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதற்கமைய சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாகவும் இலங்கை அரசு சார்பாக அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களாக இனவாத சக்திகள் கூறிக் கொண்டிருந்தன. தற்போது அரசாங்கமே சர்வதேச அழுத்தங்களை காரணம் காட்டி அதே காரணத்தை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. குறிப்பாக நல்லாட்சி நிலைபெறுவதாக கூறும் மைத்ரிபால சிரிசேனாவின் அரசு இவ்வாறு ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பது சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளை பறிக்கும் ஒரு செயலாகவே முஸ்லிம்களினால் பார்க்கப் படுகிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதற்கு ஜீ எஸ் பீ ப்லஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்கும் மத்தியில் என்ன தொடர்பு இருக்கிறது?

GSP + என்றால் என்ன?

GSP + வரிச் சலுகை என்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துக் கொண்டிருக்கும் தேந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு வழங்கப்படும் வரி விலக்காகும். இதை குறிப்பிட்ட சில காலக் கெடுகளை விதித்தே ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், குறைந்த அபிவிருத்தியை கொண்டிருக்கும் நாடுகள் என்பவற்றின் வளர்ச்சியை கட்டி எழுப்புவதற்காக இது வழங்கப்படுவதாகும். இதன் மூலம் இவ்வரிச் சலுகை பெறும் நாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலையில் சர்வதேச சந்தையில், அதாவது ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் அதிக இலாபத்தை பெற முடியும்.

இது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் ஒரு வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த GSP+ என்பதை 1971 ல் ஐரோப்பிய ஒன்றியம் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இந்தச் சலுகையை 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 01ம் திகதி இலங்கை பெற்றுக்கொண்டது. இதனால் இலங்கையின் 7200 வகையான பொருட்களுக்கான வரிவிலக்கை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியது. இதில் முக்கியமானது தைக்கப்பட்ட ஆடைகளாகும்.

ஒரு நாடு இச்சலுகையை பெற்றுக் கொள்வதாக இருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விதிக்கப்படும் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக!
நல்லாட்சி
சுற்றாடல் பாதுகாப்பு
மனித உரிமை
தொழிலாளர் உரிமை

இந்த GSP + வரிச் சலுகை கிடைக்காத காரணத்தினால் இலங்கையின் 29% ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அதிலும் ஐரோப்பிய ஒன்றியம் தைக்கப்பட்ட ஆடைகளுக்கு அதிக வரிவிதிப்பதால் இலங்கை பெரிய நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. சில வேளை இந்த அழுத்தங்கள் தான் பொருட்களின் அதிரடி விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கலாம்.

இச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க அறிவித்தார். இதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் அரசு சார்பில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பிக்க வில்லை.

இது வரைக்கும் இலங்கை பொது மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்னவென்று தெரியாது. அவற்றை அறிவிப்பது அரசின் கடமையாகும்.

முஸ்லிம் பெண்களின் திருமண வயது மனித உரிமையை பாதிக்கிறதா?

மனித உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுவதனால் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டிருந்தால் அது தவறாகும். அவ்வாறு முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்த இடத்திலும் மனித உரிமைகளோ, அடிப்படை உரிமைகளோ, சிறுவர் உரிமைகளோ மீறப்படுகின்ற எந்த சட்ட விதிகளையும் காண முடியவில்லை.

முஸ்லிம் பெண்களின் திருமண வயது தான் இதற்கு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். முஸ்லிம் பெண்களின் திருமண வயது எதுவென்று முஸ்லிம் தணியார் சட்டம் குறிப்பிடவில்லை. ஆனால் 12 வயதுக்கு குறைந்த முஸ்லிம் பெண்கள் திருமணம் முடிப்பதாக இருந்தால் காதியின் அனுமதி பெற வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் 12 வயது அல்லது 12 வயதுக்கு மேல் இருந்தால் திருமணம் முடிக்க சட்ட ரீதியாக அங்கீகாரம் இருக்கிறது என்றாலும் அதை 18 வயது பெண் ஒருவர் திருமணம் முடிப்பதை போன்று தனியார் சட்டம் குறிப்பிடவில்லை.

அதாவது, பொது சிவில் சட்டத்தில் ஒரு பெண் 18 வயதை அடைந்திருந்தால் சுயமாக எவருடைய சம்மதமுமின்றி திருமணம் முடிக்கலாம் என்று உள்ளது. அந்த நிலையில் முஸ்லிம் பெண்களின் வயது 12 ஆக இருந்தால் ஒரு முஸ்லிம் பெண் எவருடைய சம்மதமும் இல்லாமல் சுயமாக திருமணம் முடிக்கலாம் என்று முஸ்லிம் திருமண சட்டம் குறிப்பிடவில்லை. மாறாக 12 வயதாக இருந்தாலும், 18 வயதாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் பெண் திருமணம் முடிப்பதாக இருந்தால் பொறுப்பாளர் ஒருவர் மூலம் தான் திருமணம் முடிக்க வேண்டுமே தவிர சுயமாக திருமணம் செய்து கொள்ள முடியாது. இது முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பிற்காக சட்டம் ஏற்படுத்தியிருக்கும் விதியே தவிர பெண்களை கொடுமை படுத்துவதற்கானது அல்ல.

ஒரு பெண் தானாக திருமணம் செய்யும் போது ஆண்களால் ஏமாற்றப் படலாம். ஆண்கள் இயல்பில் பலசாளிகளாக உள்ளனர். பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி பெண்களுக்கு கொடுமை செய்யலாம். இதை தவிர்க்கவே இஸ்லாத்திலும் திருமண சட்டத்திலும் பொறுப்பாளர் ஒருவர் மூலம் திருமணம் முடிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

12 வயதுக்கு கீழ் உள்ள முஸ்லிம் பெண்கள் காதியின் அனுமதி பெற்று திருமணம் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதன் விளக்கத்தையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அல்லாத பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு பெண் பருவ வயதை அடைந்திருந்தால் அவர் திருமணத்திற்கு தயாரான உடல் நிலையை அடைந்து விடுகிறாள். இது பொதுவான திருமண விதியாகும். இதை தனியாக சட்டத்தில் எழுத வேண்டியதில்லை. பொது சிவில் சட்டத்திலும் ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் தான் திருமணம் செய்யலாம் என்று எங்கும் குறிப்பிடவில்லை. அதே போல் முஸ்லிம் தனியார் சட்டமும் குறிப்பிடவில்லை. எனவே 12 வயதான பெண் சிறுமி என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. அவள் பருவ வயதை அடைந்த ஒரு பெண்ணின் இடத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டியவள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

திருமண வயது 12 என்று குறிப்பிடப்பட்டது ஏன்?

அடுத்ததாக, 12 வயது என்று குறிப்பிட்டதற்கு காரணம் என்னவென்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் திருமண சட்டம் 1951ம் ஆண்டு தான் சட்டமூலமாக்கப்படுகிறது. அப்பேதைய திருமண வயதாக இலங்கை மக்களுக்கு ஒரு பொது சட்டம் காணப்பட்டது.

1907ம் ஆண்டில் 17ம் இலக்க திருமண மற்றும் விவாகரத்து கட்டளைச் சட்டம் தான் அந்த சட்டம். அதில் 15ம் ஷர்த்தில் ஒரு ஆணின் திருமண வயது 16 என்றும் பெண்ணின் திருமண வயது 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தான் இலங்கை மக்களின் பொது திருமண வயதாகும். பின்னர் 1995ம் ஆண்டின் 18ம் இலக்க திருத்த சட்டத்தின் மூலம் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயது 18 என்று மாற்றியமைக்கப்பட்டது.

முஸ்லிம் திருமண சட்டம் சட்ட மூலமாக்கம் செய்யப்படும் போது இலங்கை பெண்களின் மேஜர் வயதாக 12 இருந்துள்ளது. எனவே தான் மேஜர் அல்லாத பெண்கள் அதாவது, 12 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் திருமணம் செய்வதாக இருந்தால் காதியின் அனுமதியுடன் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் பெண்ணின் சம்மதம் பெற வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இஸ்லாம் வலியுறுத்திய பிரகாரம் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டுத்தான் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதே நேரம் பெண்ணின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று அதற்கான விதிகளை முஸ்லிம் சட்டத்தில் காண முடியவில்லை. அதற்காக பெண்ணின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்தாலும் அது செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் முஸ்லிம்கள் பெண்களின் சம்மதத்துடனேயே திருமணம் செய்கிறார்கள்.

எனவே முஸ்லிம் தனியார் சட்டம் எந்த வகையிலும் முஸ்லிம் பெண்களுக்கு எந்த பாதிப்பையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.

இந்த உண்மைக்கு புறம்பாக முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுவதும் அதை அரசு சில இலாபங்களுக்காக உண்மைபடுத்த முனைவதும் முஸ்லிம் சமுதாயத்தை அவமானப்படுத்தும் செயலாகும். சிறுபான்மையான முஸ்லிம் சமுதாயத்திற்கு இழைக்கும் அநீதியாகும்.

2005 இல்லாத கோரிக்கை 2016 எங்கிருந்து வந்தது?

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் 2005ம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி GSP+ வரிச் சலுகையை தரும் போதும் முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருந்தது. அப்போது ஏன் இந்த கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கவில்லை?

அடுத்ததாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை போன்ற அபிவிருத்தி அடையும் நாடுகளுக்கு உதவி செய்கிறது என்பதற்காக அது முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, இதில் நாடு என்ற வகையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இனவாத மஹிந்த அரசு கூட செய்யாத காரியத்தை நல்லாட்சி (?) அரசு செய்வது நியாயமா?

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி இந்த GSP+ வரிச் சலுகையை இரத்து செய்த ஐரோப்பிய ஒன்றியம் அப்போதைய இனவாத ஆட்சியாக இருந்த மஹிந்த அரசுக்கு மீண்டும் சலுகைகளை பெற்றுக் கொள்ள சில நிபந்தனைகளை முன் வைத்தது. அவற்றை மஹிந்த அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை அரசின் இறைமைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வித்தில் அவை அமைந்திருந்த்தே இதற்கு காரணம்.

GSP+ வரிச் சலுகையை மீண்டும் தருவதற்காக மஹிந்த அரசுக்கு ஐரோப்பிய யூனியன் கீழ்க்கண்ட விதிகளை விதித்தது.
நடைமுறையிலுள்ள அவசர கால தடைச்சட்டத்தில் உள்ள மிகுதி பகுதிகளை நீக்கி விசாரணையின்றி தடுத்து வைத்தல், நடமாட்ட சுதந்திர கட்டுப்பாடு விதித்தல் ஆகிய செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் சில பகுதிகளை நீக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கும், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவிற்கும் தனிநபர்கள் முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் அனுமதி.
தனிப்பட்ட விசயங்கள் சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அபிப்பிராயத்தை ஏற்று செயற்படும் அனுமதி.
காணாமற் போனோருக்கான ஐ.நா செயலாற்றுக் குழுவில் நிலுவையிலுள்ள குறிப்பிட்ட தனிமனித விசாரணைகளுக்கு தீர்வு.
2008ம் ஆண்டின் விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையை பிரசுரித்தல்.
அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் விபரத்தை வெளியிடல். தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் வழக்கை முடிவிற்கு கொண்டுவரல்.
C.R.C போன்ற நிறுவனங்களுக்கு முகாம்களுக்கு சென்று வர அனுமதி்.
தேசிய மனித உரிமைகள் செயற்திட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடனபடிக்கைக்கான பல மதிப்பு குறைப்புகளை மேற்கொள்ளல்.

போன்ற நிபந்தனைகளை GSP+ சலுகையை மீண்டும் இலங்கைக்கு தருவதற்காக ஐரோப்பிய யூனியன் அப்போதைய மஹிந்த அரசுக்கு விதித்தது. இவற்றை அப்போதைய இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே ஐரோப்பிய ஒன்றியம் GSP+ வரிச் சலுகையை தொடர்ந்து இரத்துச் செய்தது.

நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் நிபந்தனைகளை அப்போதைய இனவாத அரசே மறுத்திருக்கும் போது நல்லாட்சி எனும் பெயரில் தற்போது இயங்கி வரும் அரசு இலங்கை முஸ்லிம்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் நிபந்தனைகளை கண்மூடித்தனமாக ஏற்றிருப்பது எந்த வகையில் நியாயம்? என்று சிந்திப்பவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இதே நேரம் 1952ம் ஆண்டின் 44ம் இலக்க கண்டிய திருமணச் சட்டம் கண்டி வாழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்றும் 1948ம் ஆண்டின் இலக்க தேசவழமைச் சட்டம் யாழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது என்றும் குற்றம் சுமத்தி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு அவற்றை மாற்றியமைக்குமாறு கூறினால் அவற்றையும் இலங்கை அரசு மாற்றுமா?

எனவே GSP+ வரிச் சலுகை இலங்கைக்கு அவசியம் என்றாலும் முஸ்லிம்களின் முன்னோர்கள் போராடி வென்ற உரிமைகளை ஒரு சில இலாபங்களுக்காக குறைவைத்து பறிக்கும் செயலாக நாங்கள் பார்க்கிறோம். எனவே ஐரோப்பிய ஒன்றியமோ, இலங்கை அரசோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைப்பதை முஸ்லிம் சமுதாயம் வண்மையாக கண்டிக்கிறது. திருத்தங்கள் தேவை எனில் அத்திருத்தங்கள் புனித குர்ஆன் அடிப்படையிலும், நவி வழி அடிப்படையிலும் முஸ்லிம்கள் சார்பில் திருத்தம் செய்யப்பட வேண்டுமே தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்கு ஏற்பவோ இலங்கை அரசின் தேவைக்கு ஏற்பவோ அமைவதை முஸ்லிம்கள் வணமையாக கண்டிக்கிறோம்.

உரிமையை பாதுகாக்க குடும்பத்துடன் பங்கெடுப்போம்.

எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனை திருப்திப் படுத்துவற்காக GSP+ வரிச் சலுகையை காரணம் காட்டி சிறுபான்மை முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் கை வைக்க முயலும் இலங்கை அரசை கண்டித்து எதிர்வரும் 03.11.2016 வியாழக் கிழமை முஸ்லிம்களின் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தில் அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்வதின் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், இனிமேலும் முஸ்லிம் உரிமையில் அரசாங்கமோ வேறு எந்த இனவாத குழுக்களோ கை வைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பதை நிரூபிப்பதற்காகவும், இவ்வார்ப்பாட்ட பேரணியில் குடும்பத்துடன் பங்கெடுக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.

ஆர்பாட்டம் : நாளை 03.11.2016 (வியாழக் கிழமை)

நேரம் : மதியம் 01.00 மணிக்கு

பேரணி ஆரம்ப இடம்: தவ்ஹீத் ஜமாஅத் - (SLTJ) - தலைமையகம், மாளிகாவத்தை

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம் முன்பாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -