கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் நியமன பிரச்சினைக்கு இரு வாரத்தில் தீர்வு - கல்வி அமைச்சர்

அஸ்லம் எஸ்.மௌலானா-
கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமன பிரச்சினைக்கு இரு வார காலத்தில் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் உறுதியளித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது வருட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் இவ்வுறுதி மொழியை வழங்கியுள்ளார்.

இச்சந்திப்பு கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் முன்னர் எடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அதன் அடிப்படையில் உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் மற்றும் எதிரிக்கட்சித் தலைவர் ஆகியோருக்கு தம்மால் எடுத்துக் கூறப்பட்டதாக சங்கத்தின் தலைவர் எம்.பௌசர் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்; 

கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் 445 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக கடந்த 2001 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நடத்தப்பட்ட பல நேர்முகப் பரீட்ச்சைகளுக்கு தோற்றியுள்ள போதிலும் இவர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்பதையும் இவர்களின் நியமனம் தொடர்பில் கடந்த வருடம் கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு, மத்திய அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள போதிலும் இன்னும் அது தொடர்பில் கல்வி அமைச்சு எந்தவித பதிலையும் அளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

யுத்தம் ,சுனாமி அனர்த்தம் போன்ற இக்கட்டான காலப்பகுதியில் எவ்வித கொடுப்பனவுமின்றி மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு பாரிய பங்களிப்பை செய்து, அரசாங்க நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ள தகுதி, திறமை, அனுபவமிக்க இந்த தொண்டர் ஆசிரியர்கள் தற்போது வாழ்வாதாரமின்றி அந்தரிப்பதையும் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

இவற்றை மிகவும் கரிசனையுடன் செவிமடுத்த கல்வி அமைச்சர்; இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை துரிதப்படுத்தி, அடுத்த இரு வாரங்களில் தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்" என்று எம்.பௌசர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -