அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது சம்பளமாக ஆண்டுக்கு ஒரு டொலர் மட்டுமே வாங்குவேன் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோற்கடித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக ஒரு பேட்டியை தனியார் தொலைகாட்சி நடத்தும் 60 நிமிடங்கள் என்னும் நிகழ்ச்சிக்கு அளித்துள்ளார்.
இதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அமெரிக்க ஜனாதிபதிக்கு வருடத்துக்கு 4 லட்ச டொலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது, அதை தான் நீங்களும் வாங்குவீர்களா என கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை அவ்வளவு சம்பளம் நான் வாங்க போவதில்லை, ஆண்டுக்கு ஒரு டொலர் மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்வேன் என்றும் பணியில் இருக்கும் போது விடுமுறை எடுக்க மாட்டேன் எனவும் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
மேலும், அமெரிக்க நாட்டில் சட்டவிரோதமாக 3 மில்லியன் மக்கள் குடியேறியுள்ளனர். நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் என அவர் கூறியுள்ளார். தன்னை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் நல்ல திறமையான மற்றும் வலுவானவர் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர் கலந்து கொண்ட இந்த தனியார் தொலைகாட்சி பேட்டியில் அவருடன் அவர் குடும்பத்தாரும் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.