என்.எம்.அப்துல்லாஹ்
இறுதியாக வெளியிடப்பட்ட யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவிற்கான வீட்டுத்திட்ட விண்ணப்பதாரிகள் குறித்த விபரத்தில் 987 குடும்பங்களே வீட்டுத்திட்டங்களிற்காக முழுமையான விண்ணப்பங்களை வழங்கியிருக்கின்றார்கள், இதில் 300ற்கும் குறைவான முஸ்லிம் குடும்பங்களே வீட்டுத்திட்டங்களுக்காக விண்ணப்பித்திருக்கின்றார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம், வெள்ளைக்கடற்கரை, சாவகச்சேரி பிரதேசங்களில் காணிகளைக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் குடும்பங்கள் பல வீட்டுத்திட்டங்களுக்கு உரிய முறையில் விண்ணப்பங்களை வழங்கவில்லை எனத் தெரியவருகின்றது.
யாழ் மாவட்டத்தில் காணிகளைக் கொண்டிருக்கின்ற அனைவரும் வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி மேற்படி தரவுகளை நோக்குகின்ற போது எமக்குத் தெரியவருகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்படுகின்ற உதவித்திட்டங்களை அம்மக்கள் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. காணியற்றோர் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க காணிகள் இருந்தும் வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பது ஆரோக்கியமற்றது. எனவே இதுவிடயத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
காமல் வீதி, மொஹிதீன் மஸ்ஜித் வீதி, ஆசாத் வீதி, ஜின்னா வீதி போன்ற இடங்களில் பல வீடுகள் இன்னும் இடிபாடுகளுடனேயே காணப்படுகின்றன, இவற்றின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருக்கின்றார்கள், அவர்கள் வீட்டுத்திட்டங்களிற்காக விண்ணப்பிக்க முடியும், ஆனால் இதுவரை அவ்வாறான முயற்சிகள் இடம்பெறாமல் இருப்பதனூடாக குறித்த உதவித்திட்டங்களை இழக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே குறித்த காணி உரிமையாளர்கள் வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இம்மாதம் வழங்கப்படவிருக்கின்ற 10 இலட்சம் பெறுமதியான 200 வீடுகளை வழங்கும் திட்டத்தில் 12 முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டிருக்கின்றன, இது விடயம் தொடர்பில் பிரதேச செயலாளரை வினவியபோதே முஸ்லிம் மக்களின் விண்ணப்பங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்து அறியமுடிந்தது.