பாறுக் ஷிஹான்-
வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடாத்திவரப்படும் கடையில் இன்று மாலை வானொலிக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
பழைய பொருட்களைச் சேகரிக்கும் நபர் ஒருவரிடமிருந்து குறித்த நபர் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார். அதன்போதே குறித்த வானொலியையும் அவர் கொள்வனவு செய்துள்ளார்.
இவ்வாறு அவரால் கொள்வனவு செய்யப்பட்ட வானொலியைத் திருத்த முற்பட்டபோதே குறித்த வானொலிக்குள் கைக்குண்டொன்று காணப்பட்டுள்ளது.
அவர் உடனே அங்கிருந்து வெளியேறி வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர் கடந்த 3 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.