நாட்டில் நிரந்தரமான ஐக்கியத்தினை கட்டியெழுப்புவதற்கான முக்கியமான தருணமொன்று ஏற்பட்டு இருக்கையில் திடீரென பொதுபலசேனாவும் இனவாதசக்திகளும் தலைதூக்கியதன் காரணம் என்ன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹுமத் மன்சூர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு நல்லாட்சியை நோக்கி பயணக்கி ஆரம்பித்துள்ள நிலையில் இனவாத சக்திகளின் பின்னணியில் யார் செயற்பாடுகின்றார்கள் என்பதை பக்கச்சார்பற்ற விசாரணையின் மூலம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மீண்டும் இனவாதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதோடு தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் கடந்த காலத்தில் இனவாத்தின் உக்கிரமான நிலைமை காணப்பட்டது. குறிப்பாக முஸ்லிமகளுக்கு எதிராக தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பித்து அளுத்கம அழிப்பு வரையில் மிக மோசமான பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்திய குழுவினர் செயற்பட்டனர். அதனை அப்போதைய ஆட்சியாளர்களும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆமைதிகாத்து பொறுக்கமுடியாததன் வெளிப்பாடாக ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டில் நல்லாட்சியை முன்னிலைப்படுத்திய களமிறங்கிய கூட்டணிக்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆட்சியில் அமர்த்தினர். இப்போது தேசிய அரசாங்கம் உருவாகி 21மாதங்களாகின்றது. அரசியலமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன. நல்லிணக்கம் தொடர்பான கருத்துருவாக்கங்கள் இடம்பெறுகின்றன. அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு ஆளும், எதிர்த்தரப்புக்கள் ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ள நிலையில் திடீரேன இனவாத பூதம் மீண்டும் எழுப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சிகளும் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றன. வாலைச்சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனா உள்ளிட்ட இனவாதக்குழுக்கள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குறிப்பாக மாணிக்க மணிக்க மலையில் புத்தர்சிலையை திட்டமிட்டு அமைக்கின்றார்கள். அதன் பின்னணியில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரே இருக்கின்றார் என்பது வெளிப்படையாது.
அதேபோன்று பெப்பிலியானயில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தாக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு முஸ்லிம்கள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும், வெளிநாடுகளில் இருந்து வந்து தீவிரவாத சிந்தனைகளை அழுத்தமாக மூளைச்சலவை செய்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இவையெல்லாம் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலைமையை ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கின்றது. ஆகவே தற்போதுருவாகியுள்ள நல்ல சந்தர்ப்பத்தில் திடீரென இனவாதிகள் சக்திகள் தலைதூக்கியுள்ளமைக்கான காரணம்? அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதை வெளிப்படுத்துவதோடு இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.