“ஜூலை 1983 தமிழர் எதிர்ப்புக் கலவரங்களின் பின்னர், தமிழ் நாட்டுக்கு தமிழ் அகதிகள் வருகையும் தமிழ் நாட்டு அரசாங்கத்துக்குத் தெரியக்கூடியதாக அதன் அனுசரணையுடன் தமிழ் கிளர்ச்சியாளர்கள் பயிற்றுவித்தலும் தொடங்கியது.
இந்த வகையில், தமிழ் நாட்டின் நடவடிக்கைகள் இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல என புதுடெல்லி உணர்ந்த வேளையில்தான், 1984இல் இந்திய தேசிய புலனாய்வு முகவரங்கள், அவர்களின் பயிற்சித் திட்டங்களைத் தொடங்கின” என, “ஒப்பரேஷன் பவான்: IPKF உடன் விமானப்படையின் வகிபாகம்” எனும் தனது நூலில், முன்னாள் விமானப்படை தளபதி பாரத் குமார் கூறியுள்ளார் என, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் நாட்டில் தமிழ் கிளர்ச்சியாளர்களின் பயிற்சி, மாநில அரசாங்கத்துக்குத் தெரியும் வகையிலும் சில சமயம் அதன் ஆதரவுடனும் தொடங்கியது. புதுடெல்லி இந்த தமிழ் குழுக்களை கட்டுப்படுத்தும்படி கூறியமை தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. இலங்கை மீதான தமிழ் நாட்டின் ஆக்கிரமிப்பை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால், இந்திய உளவு நிறுவனங்களும் 1984இல் தலையீடு செய்தன. இந்திய மத்திய அரசின் தலையீடு, தமிழ்நாடு அரசின் தலையீட்டை விட நல்லதாக இருந்தது. இதற்கான காரணம் வெளிப்படையானது” என பாரத் குமார் கூறியுள்ளார்.
எம்.ஜி. இராமச்சந்திரன் மற்றும் கருணாநிதி போலன்றி பிரதமர் இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் சுதந்திர தமிழ் ஈழம் என்பதை விரும்பவில்லை. இவர்கள், தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி வழங்குதலை, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தந்திரமாகவே கருதினர்.
இதனால்தான் இலங்கைத் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு 1984இல் பயிற்சி நடந்து கொண்டிருக்கையில், பிரதமர் ராஜிவ் காந்தி, டிசெம்பரில் பாக்கு நீரிணையில் ரோந்துக்காக இந்தியக் கப்பல்களை அனுப்பினார். பாரத் குமார், “சைனைட் யுத்தம்” எனும் நூலை ஆதாரமாகக் காட்டி இவ்வாறு கூறுகின்றார்,
“ராஜிவ் காந்தி, இலங்கை கிளர்ச்சியாளர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆயுதம் போவதைக் குறைக்கத் தீர்மானித்தார். மார்ச் 1985இல் பாக்கு நீரிணை ஊடாக ஆயுதங்களைக் கடத்துவதாக சந்தேகிக்கப்பட்ட கப்பல்களைச் சோதனை செய்ய, இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படை தொடங்கியது”.
“இந்த நிலையிலும், 1987 தொடங்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேவைக்கு அதிகமாகப் பலம் பெற்றுவிட்டதென்ற அச்சம் காணப்பட்டது. இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களையவும் தொடர்பு சாதனங்ளை பறிக்கவும் என 1986 நவம்பர் இல், ‘ஒப்பரேஸன் ரைகர்’ எனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது பெங்களூர் சார்க் மாநாட்டுக்கு முன்னர் நடந்தது. ஆயினும், நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோர் நேரடியாகப் பேச வேண்டுமென ராஜிவ் விரும்பினார். பறிக்கப்பட்ட கருவிகள் விடுவிக்கப்பட்டன.
ஜே.ஆர் - பிரபாகரன் பேச்சு முறிந்து போனது. ஜே.ஆர், வடக்கு - கிழக்கு இணைவுக்கு உறுதியாக மறுத்துவிட்டார். பிரபாகரனும் தனித் தமிழ் நாட்டு கொள்ளையில் விடாப்பிடியாக இருந்தார். இந்தப் பிடிவாதம் காரணமாக ராஜீவ் காந்திக்குப் பிரபாகரன் மீது வெறுப்புத் தோன்றி ஜெயவர்த்தனவின் கருத்துக்குச் சாதகமாகத் திரும்பினார். 1986இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மாற்று தமிழ் கிளர்ச்சி இயக்கங்களை அடக்கி ஒடுக்கியதுடன், இலங்கைப் படைகளுக்கு எதிராக, யாழ். குடாநாட்டைப் பாதுகாத்தும் வந்தது. 1987 இல் யாழ்ப்பாணத்தில் தனியானதொரு நிர்வாகக் கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த போது, இலங்கை அரசாங்கம் ஓரளவு பஞ்சம் ஏற்படுத்தக்கூடிய, உணவு மற்றும் எரிபொருள் தடையை வடக்கில் அமுலாக்கியது.
இந்த நிலையில், ஏற்படக் கூடிய அவசர நிலைகள் என தான் கருதிய நிலைமைகளை சமாளிக்கும் பல திட்டங்களைத் தீட்டியது. இவற்றில் சில நூதனமானவையாகவும் இருந்தன.
இலங்கை, இந்தியாவின் நலனுக்குப் பாதகமான முறையில் வேறு நாடுகளை இலங்கைக்கு வரவழைத்தால் அதற்கு எதிராக இலங்கையில் படையை இறக்கும் திட்டம் ஒன்றையும் தீட்டியது.
இப்படியாக ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, 1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலையை உருவாக்கியது. இந்த ஒப்பந்தம் அமுலாக்குவதை கண்காணிக்க இந்திய அமைதிகாக்கும் படை (ஐ.பி.கே.எப்) இலங்கையில் இருப்பதற்கும் ஜே.ஆர், சம்மதிக்க வேண்டியிருந்தது.
தமிழ்மிரர்