க.கிஷாந்தன்-
2015ம் ஆண்டு கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி கஷ்டமான பிரதேசமாகவும், குளிர் பிரதேசமாகவும் காணும் நுவரெலியா மாவட்டத்திற்கு இதே வெட்டுப்புள்ளி அளவு வழங்கப்பட்டுள்ளமை நுவரெலியா மாவட்ட மாணவர்களை பல்கலைகழகத்திற்கு உயர் படிப்புக்கென செல்லவிடாத நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த வெட்டுப்புள்ளியின் அளவை 2014ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள அதே அளவிற்கு தற்போதும் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து நுவரெலியா நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமர், மனித உரிமை மீறல் போன்ற இன்னும் பல திணைக்களங்களக்கு அழுத்தம் கொடுத்து போராட்டம் ஒன்றினை நுவரெலியா நகரின் தபால் அலுவலகத்தின் முன்னால் நடத்தினர்.
1.11.2016 அன்று இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 1000ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டமானது நல்லாயன் மகளிர் பாடசாலை வளாகத்திலிருந்து பேரணியாக நகரை வந்தடைந்து இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமது கோரிக்கைகள் அடங்கிய தயாரிக்கப்பட்ட மகஜரை மாவட்ட கல்வி காரியாலயத்திற்க சமர்பிக்கவென ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பேரணியாக சென்றே கல்வி அதிகாரிடம் மகஜரை கையளிக்க உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.