எதிர்கால சந்ததியினரின் கல்வியினை திட்டமிட்டு சில அரசியல் தலைமைகள் சீரழிக்கின்றன - ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி-
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கான பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் (07.11.2016 திங்கள்கிழமை) நேற்று காலை 9.00 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச எல்லைக்குற்பட்ட பல்வேறு செயன்முறை மீளாய்வுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

மிகவும் விமர்சனத்திற்குரிய பிரச்சினையாக உருவாகியுள்ள காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அமைவிடப் பிரச்சனைக்கான தீர்வு விடயம் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இதன்போது கேள்வி எழுப்பினார்.

சுமார் 400 மாணவர்களை கொண்ட பாத்திமா பாலிகா பாடசாலையினை நடாத்துவதற்கான சரியான இடம் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டபோது காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த பெண்கள் சந்தைக்கான கட்டடம் சரியான விதத்தில் இயங்காமை காரணமாக பாத்திமா பாலிகா பாடசாலையினை நடாத்துவதற்கு வழங்கப்பட்டது. இதற்காமைவாக பாத்திமா பாலிகா பாடசாலை பெண்கள் சந்தை கட்டிடத்திலும் கடற்கரை வீதிக்கு மறுபுறமுள்ள தோனாவிற்கு மேல் ஒரு கட்டிடத்திலும் இயங்கி வந்தது.

இவ்வாறு கழிவு நீர் செல்லுகின்ற ஒரு வடிகானுக்கு மேலால் பாடசாலை அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக மாணவர்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதோடு, பாடசாலை வீதிக்கு இருபுறமும் அமைந்திருப்பதனால் மிகவும் வாகன நெரிசல் நிறைந்த கடற்கரை வீதியினை கடக்கும் போது மாணவர்கள் விபத்துக்குள்ளாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. மேலும் இப்பாடசாலைக்கென மலசலகூட வசதி இன்மை காரணமாக அருகில் உள்ள வீடுகளில் மாணவர்களின் மலசலகூட தேவைகளை பூர்த்தி செய்யவேண்டி ஒரு துர்ப்பாக்கிய நிலை இப்பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்பாடசாலைக்கென புதியதொரு கட்டடத்தை அமைப்பதன் ஊடாக மேற்குறிப்பிட்ட அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் மேற்கொண்ட முயற்சியின் பலனாக கிழக்கு மாகாண சபை மூலம் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கென முதற்கட்டமாக 55 இலட்சம் ரூபாயும் அடுத்த கட்டமாக மேலும் 65 இலட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

இக்கட்டிடத்தினை அமைப்பதற்கென பாடசாலைக்கு அருகாமையில் உள்ள அரச காணியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் அமைவிடம் தெரிவுசெய்யப்பட்டதோடு பூங்காவினை வேறு இடத்துக்கு இடம்மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் குறித்த பூங்காவிற்கான அரசகாணி தமது சொந்த காணி என்று போலியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் நடைபெறவிருந்த அபிவிருத்தி தடைசெய்யப்பட்டிருந்தது.

பாத்திமா பாலிகா வித்தியாலயம் தொடர்பாக கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தினை காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டு தற்போது பாடசாலை இயங்கிவரும் பெண்கள் சந்தை கட்டடத் தொகுதியினை முஹைதீன் பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கு மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்தார்.

இருந்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது பாத்திமா பாலிகா பாடசாலைக்கென மீண்டும் ஒரு கட்டடம் கழிவு நீர் செல்லும் தோனாவிற்கு மேல் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கழிவு நீருக்கு மேல் பாடசாலையினை அமைத்து மாணவர்களை நோயாளிகளாக மாற்றுகின்ற இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கேள்வி எழுப்பிய போது எதுவித ஆக்கப்பூர்வமான பதில்களும் வழங்கப்படவில்லை.

ஆகவே ஒரு சில அரசியல் தலைமைகளின் இவ்வூரின் எதிர்கால தலைவர்களான மாணவ சமூகத்தின் மீதான அக்கறையற்ற போக்கும் மக்களின் பணத்தினை வீண்விரயம் செய்யும் நடவடிக்கையும் மக்கள் மத்தியில் அதிருப்திகரமான ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -