இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை கூறி இன முறுகல்களை ஏற்படுத்தும் விதமாக பேசும் அமைச்சர்கள் நல்லாட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகையில் இனங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களை நல்லாட்சியில் உள்ள அமைச்சர்களே கூறுவது கண்டிக்கத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் எழுச்சி காணும் கல்குடா வேலைத்திட்டத்தின் ஊடாக ஒரே நாளில் கல்குடாவில் 7 கோடியே 60 இலட்ச ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.
சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளுடன் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் நல்லாட்சி அரசுக்கு வாக்களித்து ஆட்சியலமர்த்தி இருக்கின்றார்கள்.
சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இந்த ஆட்சிக்கு வாக்களித்தமையினாலேயே சர்வதேசமும் நல்லாட்சி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
இந்த நிலையில் நல்லாட்சியில் உள்ள அமைச்சரொருவர் இனவாதத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுவது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் விடயம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே அவ்வாறு இனவாதம் பேசும் அமைச்சர்களை அமைச்சரவையில் வைத்திருப்பது நல்லாட்சி மீதான மக்கள் நம்பிக்கையை இல்லாமலாக்கச் செய்யும் என்பதால் அவர்களை உடனடியாக நீக்கி அரசாங்கம் சிறந்த முன்னுதாரணத்தை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் அரசாங்கம் இவ்வாறான முன்னுதாரணத்தை காட்டுவதன் ஊடாக இனவாதம் பேச முற்படும் ஏனைய அரசியல்வாதிகளுக்கு இது சிறந்த பாடமாக அமையும் என நம்புவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.