மட்டக்களப்பு மங்களராமயவில் உள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் பொது செயலர் ஞானசார தேரர் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு சிவில் அமைப்புகள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாரபட்சம் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகியவை தொடர்பான சட்டங்களை மீறிய பௌத்த பிக்குகள் அடங்கலாக அனைவரையும் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
300 இற்கும் மேற்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எண்ணிக்கையிலே சிறுபான்மையினரான இன மற்றும் மொழியினர்கள் மீது பௌத்த பிக்குவின் தலைமையிலே மேற்கொள்ளப்படும் வன்முறைத் தாக்குதல்களையிட்டு அரசின் தண்டிக்காத மெத்தனப்போக்கையிட்டும், பொலிஸார் அப்பட்டமாகவே செயற்படாதிருந்தமை பற்றியும் நாம் சீற்றமடைந்திருக்கிறோம்.
இலங்கையின் சட்டம் அதன் சகல குடிமக்களுக்கும் சமத்துவத்துக்கும், பாகுபாடின்மைக்கும் மத சுயாதீனத்துக்கும் மத ஆராதனைக்குமான உரிமைகளைத் தெளிவாக உத்தரவாதப்படுதியுள்ளது. எனினும் இலங்கை முழுவதிலும் மொழி மற்றும் மத சிறுபான்மையினர்களுக்கு எதிராக பெரும்பான்மையினர்களால் அநேகமாக ஒருசில அல்லது பல பௌத்த பிக்குகளின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் எண்ணிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படாமல் விடப்படுகின்றமை கண்கூடு. சிவில் சமூகக் குழுக்கள் அப்படியான தாக்குதல்களை ஆவணப்படுத்தி அப்படியான தாக்குதல்களை உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதைத் தளராமல் மேற்கொண்டு வருகின்றன. இருந்தும், இந்தப் பிக்குகளின் வெறுப்பான பேச்சுக்கள், இனத்துவேஷம் போன்றவை இலங்கைச் சட்டத்தைத் தெளிவாக மீறுவதாக இருந்துங்கூட, குற்றம் இழைத்த இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை எப்போதுமே தாக்கல் செய்யப்படுவது கிடையாது.
பொதுபலசேனா அமைப்பின் பெயர்போன தலைவர், , ஞானசார தேரர் என்பவர். தான்தோற்றித்தனமாகத் தன்னையே ‘சிங்களவர்களின் மீட்பன்’ எனக் கூறிவரும் சுரேஷ் பிரசாத் (மறு பெயர் டான் பிரியசாத்) என்பவரின் கைது தொடர்பிலே விடுத்த பதிலீடு எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஞானசார தேரர் ஒரு ‘இரத்த ஆறு ஓடும்’ என அச்சுறுத்தியதுடன் ‘இந்த விடயத்தை நாம் கற்கள் மூலமும் தடித்தண்டுகள் மூலமும் இரத்தம் மூலமும் தீர்க்க வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்களுக்குத் தேவையென்றால் அதைத்தான் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்’ என்று தெளிவாகக் கூறியமை காணொளியில் பதிவாகி இருக்கிறது.
இந்தச் சம்பவ நிகழ்விலே ஞானசார தேரர் டான் பிரியசாத் என்பவரின் கைதுக்கு பதிலடியாக இலங்கை தௌஹீத் ஜமத் (ளுடுவுது) செயலாளரான அப்துல் ரஸாக் என்பவரை’ 24 மணித்தியாலங்களுக்குள்’ கைதுசெய்யும்படி அறைகூவல் விடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அப்துல் ரஸாக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாயும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாயும் தகவலறிந்து கொண்டோம்.
இந்தக் கைதும் அது இடம்பெற்ற துரித கதியும் ‘சுயாதீன’ நிறுவனமாகத் திகழவேண்டிய பொலிஸார் மீதுங்கூட ஞானசார தேரரின் வார்த்தைகள் மகத்தான செல்வாக்குச் செலுத்துவதைப் புலப்படுத்துகிறதாய் உள்ளன. மோசமான தீவிரக் குழுக்கள் குறிப்பாக பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் கட்டுக்கடங்கா வன்முறைத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு தாக்குதல் பற்றி வாழாதிருக்கும் பொலிஸாரின் அசமந்த நிலைப்பாட்டின் பின்புலத்திலே இப்படியான துரித கைது ஆழ்ந்த பிரச்சினைக்குரிய விடயமாகும்.
ஞானசார தேரரை உள்ளடக்கிய ஒரேயொரு சம்பவம் இதுதான் என்பதற்கல்ல. ஆயினும், எமது அறிவுக்கு எட்டிய வரைக்கும் இது தொடர்பிலே ஞானசார தேரருக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அண்மையிலே மட்டக்களப்பு மங்களராமய ஆலயத்தின் பிரதம பிக்குவான அம்பிட்டியே சுமங்கல தேரர் என அடையாளம் காணப்பட்டவருடைய இன்னுமொரு காணொளி வலைத்தளங்களிலே பகிரப்படுகிறது.
அந்த தேரர் மோசமான இனத்துவேஷ வார்த்தைகளையும் கீழ்த்தரமான மொழிநடையையும் பயன்படுத்தி, சீருடை தரித்த பொலிஸாரின் முன்னிலையிலேயே ஒரு தமிழ் அரச உத்தியோகத்தர் மீது வார்த்தைத் தாக்குதலை மேற்கொண்டார். அந்த அரச உத்தியோகத்தரைப் பாதுகாக்கவோ அல்லது அந்தப் பௌத்த பிக்குவைத் தடுக்கவோ அவசியமான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் அந்தப் பொலிஸார் அங்கே நின்று அவதானித்துக் கொண்டு நின்றிருந்திருக்கிறார். இறுதியாக பொலிஸ் அதிகாரி தயங்கியபடியும் பயத்துடனுமே அங்கே தலையிட்டதாகத் தென்படுகிறது.
அம்பிட்டிய சுமங்கல தேரர் தொடர்பான அந்த அண்மைய சம்பவமும் இதுமட்டுமல்ல. இதே பிக்கு பல்வேறு சம்பவங்களிலே ஈடுபட்டு இதேபோலவே கீழத்தரமான பேச்சிலும் வன்முறைத் தாக்கங்களிலும் ஈடுபட்டிருக்கிறார். ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரையும் மற்றும் சில கிராமத்தவர்களையும் தாக்கிய அண்மைய சம்பவமும் இதற்குள் அடங்கும். இதுவரைக்கும் அம்பிட்டிய சுமங்கல தேரருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படியான அச்சுறுத்தல்களிலும் வன்முறைகளிலும் இருந்து சகல மக்களையும் பாதுகாக்கும் அதன் கடமை மற்றும் சட்ட மன்ற உத்தரவாதங்கள் தொடர்பான அதன் கடப்பாடு ஆகியவைகளை மீறுவதாய் உள்ளதென்பது தெளிவு.
இனப் பாரபட்சத்தை இல்லாதொழித்தலுக்கான குழுவுக்கு ஓகஸ்ட் 2016 இலே சிவில் சமூகங்கள் இணையம் வழங்கிய அறிக்கையானது 2015 முதல் ஒரு வருட காலத்துக்குள் கிறிஸ்தவர்கள் முகங்கொடுத்த அவர்களுக்கு எதிரான 132 சம்பவங்கள், முஸ்லிம்கள் முகங்கொடுத்த முஸ்லிம்களுக்கு எதிரான 141 சம்பவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
சமய வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆராதனை அல்லது தொழுகை வேளைகளிலே பல்வேறு சிறுபான்மை மதக்குழுக்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை போன்றவைகள் இவைகளுள் உள்ளடங்கும். 2014 கலகத்திலே முஸ்லிம்களைப் படுகொலை செய்த சம்பவத்தை விசாரிக்க அதிகாரிகளால் இயலாதிருப்பது அல்லது விரும்பாதிருப்பது பௌத்த தீவிரவாதிகள் விடயத்தை அரசாங்கம் ஆழமாக கவனத்திற் கொள்ளவில்லை என்பதை மேலும் ருசுப்படுத்துவதாக உள்ளது.
இப்படியான இனத்துவேஷ காழ்ப்புணர்வுப் பேச்சுக்களை பகிரங்கமாகவும் வினைத்திறனுடனும் கண்டிக்கவோ அல்லது அப்படியான குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவோ விரும்பாமல் இருக்கும் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கினால் நாம் ஆழ்ந்த விரக்தியும் கோபமும் கொண்டுள்ளோம். பாரபட்சம் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகியவை தொடர்பான சட்டங்களை மீறிய பௌத்த பிக்குகள் அடங்கலாக அனைவரையும் உடனடியாக நீதிமன்றத்திலே முன்னிலைப் படுத்துவதற்கு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெறுப்புப் பேச்சுக்களையும் மத மற்றும் இன ரீதியிலே எண்ணிக்கையின்படி சிறுபான்மையான மக்கள் மீதான வன்முறை அச்சுறுத்தல்களையும் பரப்பிவரும் அத்தகைய குழுக்கள் பொதுமக்களிலே ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கையும் தாக்கத்தையும் அரசாங்கம் சீரியஸாகக் கவனத்திற் கொள்ளவேண்டும். எவ்வித பயமோ அல்லது விளைவைப் பற்றிய அச்சமோ இல்லாது அதேபோன்ற பாணியிலே சிவிலியன்களும் செயற்பட அனுமதிக்கும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதாய் அது அமையலாம்.
இதற்கான தெளிவான ஒரு உதாரணமாக, ‘சிங்கள பௌத்த வீரதீரர்கள்’ அல்லது ‘சிங்கள மக்களின் இரட்சகர்கள்’ என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்தி முஸ்லிம்களை எரிப்பதாயும் கொல்வதாயும் அச்சுறுத்தும் ஒரு குழுவினர் தமது ‘உன்னத நோக்கத்தை’ சேவிக்க பெருமளவிலான ஆட்சேர்ப்புக்கு அழைப்பு விடுத்து, மக்களைத் தப்பான தகவல்களின் மூலம் இன மற்றும் மத ரீதியிலே தூண்டி வருவதைக் குறிப்பிடலாம்.
மத வன்முறை நடவடிக்கைகள், மத மற்றும் மொழியின ரீதியிலே எண்ணிக்கையிலே சிறுபான்மையோருக்கு எதிராக விடுக்கப்படும் வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் ஆகியவற்றுக்கு எதிராக சீரான ஒரு பதிலீட்டினை பொலிஸார் கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தின் முன்பாக சமத்துவத்தின் அடிப்படைக் கொள்கையின் கீழ், மேற்படியான நடத்தைகளிலே ஈடுபடும் பௌத்த பிக்குகள் உட்பட அனைவரும் பொறுப்பு கூறும்படி செய்யப்படல் வேண்டும். எவ்விதப் புறநடையும் இல்லாது சமத்துவச் சட்டத்தை அமுல்படுத்துவது பொலிஸாரின் கடப்பாடாகும்.
மேலும், சமத்துவத்தின் கொள்கையையும் அபிப்பிராயத்தையும் பாதுகாப்பது சகல சட்டம் அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கும் மிக மிக முக்கியமானதாக வேண்டும். அரசாங்கம் பகிரங்கமாக விடுத்த அதற்கான அர்ப்பணியைப் பிரகடனப்படுத்திய நல்லிணக்கத்துக்கு இது அவசியமானதாகும். மத மற்றும் மொழியின எண்ணிக்கைச் சிறுபான்மையினர்கள் வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படும்போதும், பாரபட்சமான செயற்பாடுகளிலே ஈடுபடும்போதும், அரசாங்கம் அதையிட்டு வாழாதிருந்தாலோ அல்லது அவற்றையிட்டுப் பாராமுகமாக இருந்தாலோ நல்லிணக்கம் தொடர்பான அதன் கலந்துரையாடல்கள் மேற்பூச்சானதாகவும் நேர்மையற்றதாகவும் தொனிக்கலாம்.
பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி பொலிஸுக்கு நாம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கிறோம்.
1) நவம்பர் 15, 2016 அன்று ஞானசார தேரர் விடுத்த கூற்றுகளுக்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அது இன முறுகல்களுக்கு எண்ணெய் வார்த்து, எண்ணிக்கை ரீதியிலே சிறுபான்மையான மத மற்றும் மொழியினங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி அச்சுறுத்துவதாய் இருக்கிறது. ஞானசார தேரரின் முன்னைய நடத்தைகள் தொடர்பில் பகிரங்க தளத்திலே போதியளவு சான்றுகள் உள்ளன.
2) மட்டக்களப்பு மங்களராமயவில் உள்ள அம்பிட்டிய சுமங்கலே தேரரை, சட்டத்தைப் பற்றி எள்ளளவும் கரிசனை கொள்ளாத விதத்திலே அமைந்த அவரது பல்வேறு இனத்துவேஷச பேச்சுகளுக்காகவும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே இழைத்த வன்முறைகளுக்காகவும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
3) இதர அனைத்து தீவிரக் குழுக்களையும் நபர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் விசாரணை செய்து சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4)அளுத்கம சம்பவத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பிலே ஞானசார தேரர் விடுத்த அச்சுறுத்தல் பற்றி இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) செய்த புகாரின்பேரில் மேற்கொண்ட நடவடிக்கையின் நிலைமை தொடர்பிலே பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம்