காணி, பொலிஸ் மற்றும் நிதி தொடர்பான முழு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவும் மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் ஒரு குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு அமைய இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டன.
மத்திய அரசு, மாகாண சபை மற்றும் பிரதேச நிர்வாகங்கள் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டிய விதம் குறித்து பரிந்துரைகளை செய்ய இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
13 வது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தி, காணிகளை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்குவது.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை மத்திய அரசாங்கத்தில் இருந்து பிரிப்பது மற்றும் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரங்களை முதலமைச்சருக்கு வழங்குவது.
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள நிறுவன பட்டியலை நீக்கி விட்டு, மத்திய அரசு மற்றும் மாகாண சபைகள் இடையில் உரிய முறையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளல்.
மத்திய அரசாங்கத்திடம் உள்ள தேசிய கொள்கை வகுப்பு அதிகாரத்தை நீக்குதல்.
அரசியலமைப்பு நீதிமன்றத்தை ஸ்தாபித்தல். மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் ஏற்படும் அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையை தீக்கவும் தீர்ப்பு வழங்கவும் உயர்நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் இதன் மூலம் இரத்துச் செய்யப்படும்.
அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கான உறுப்பினர் இனவாரி அடிப்படையில் நியமித்தல்.
மாகாண அரசுக்கு சுதந்திரமான நிதி அதிகாரம் மற்றும் வரி அறிவீடு செய்யும் அதிகாரங்களை வழங்குதல்.
மாகாண அரச சேவையின் நிர்வாகத்தை மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருதல். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருதல். மாகாண அரச சேவை ஆணைக்குழு முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
ஆளுநரை நியமிக்க்க முதலமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ளல். மாகாண சபைகள் தவறாக அதிகாரத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில், மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாகாண சபையை கலைக்க அரசியலமைப்பு நீதிமன்றத்திடம் அனுமதியை பெற்றுக்கொள்ளுதல்.
பொது அரசியல் அதிகாரம் என்ற மக்களின் ஆதிபத்திய அதிகாரத்தை, மத்திய, மாகாண மற்றும் பிரதேச என்று மூன்றாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ளல்.
நாடாளுமன்றத்திற்கு இருக்கும் மாகாண துறைகளுக்கான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் மற்றும் கொள்கைகளை பரிந்துரைக்கும் அதிகாரம் என்பவற்றை இரத்துச் செய்தல் ஆகிய பரிந்துரைகளை இந்த உப குழுக்கள் முன்வைத்துள்ளன.