நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களின் உரைக்கான தவ்ஹீத் ஜமாஅத்தின் தெளிவறிக்கை

டந்த 18/11/2016 அன்று கௌரவ நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் இனவாத செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காய் இலங்கை அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் குறித்து உரையாற்றினார்.

இனவாதத்தை விதைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிடும் அம்சத்தை ஆதரிக்கும் நாம், தீவிரவாத செயற்பாடுகளுடன் இஸ்லாமிய அமைப்புகளையும், கல்விக்கூடங்களையும் முடிச்சுப் போட்டு கருத்துத் தெரிவித்தமையை முற்றாக தவறு காண்கின்றோம்.

ISIS பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டியவர்களே!

அமைச்சர் அவர்கள் தனது உரையில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS உடன் இணைவதற்காக இலங்கையிலிருந்து 4 குடும்பங்களிலிருந்து 32 நபர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளதாக ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். இது குறித்து இலங்கை மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். உண்மையில் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பான ஜிஹாதிய குழுக்கள் இலங்கையில் இயங்கிவருவதாக கூறப்படும் இக்கருத்து சென்ற ஆட்சியின் போதே முதலாவதாக பரப்பப்பட்டது.

அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் இக்கருத்து தவறானது. இலங்கையில் அப்படியொரு அமைப்பு கிடையாது என்று பகிரங்கமாகவே மறுப்பறிக்கையினை வெளியிட்டு இருந்தார். இலங்கையிலிருந்து குறிப்பிட்டதொரு குடும்பத்தைச் சார்ந்த சிலர் ISIS அமைப்புடன் இணைவதற்காக சிரியாவுக்கு சென்றது உறுதிப்படுத்தப்பட்டபோது கூட இலங்கை வாழ் ஒட்டுமொத்த முஸ்லிம்களும், இஸ்லாமிய மத மற்றும் சிவில் அமைப்புகளும் இச்செயற்பாட்டை வண்மையாக கண்டித்ததுடன், ISIS அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்புத் தான். அதற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளின் முனையளவும் சம்பந்தம் இல்லை என்பதையும் குறிப்பிட்டு அறிக்கைகள் கூட முஸ்லிம் அமைப்புகளினால் விடப்பட்டன.

இச்செயற்பாட்டை எந்தவொரு முஸ்லிமும் ஆதரிக்கவில்லை. இலங்கையில் இப்படியானதோர் தீவிரவாத ஆயுத அமைப்புடன் தொடர்புபட்ட ஓர் அமைப்போ, அல்லது தனி மனிதர்களோ இருப்பின் அவர்களை உடனடியாகக் கைது செய்து உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு அரசை முஸ்லிம்கள் சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் வினயமாய் கேட்டுக் கொள்கிறது.

நிலைமை இப்படியிருக்க, என்றோ பரப்பப்பட்டு அதற்கு முஸ்லிம்கள் சார்பாக பதிலளிக்கப்பட்ட ஒரு விடயத்தை இனவாத அலைகள் மீண்டும் மேலெழுந்துள்ள இத்தருணத்தில் பொறுப்பான பதவியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் அவர்கள் திடுதிப்பென கால, இட நிலைமைகளை ஆய்ந்தறியாது வெளியிடுவதானது சமூக தளத்தில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்கவே வழி வகுக்கும். ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாமிய அமைப்புகளையும் தீவிரவாதத்துடன் முடிச்சுப்போடுவது இனவாதம் முனை மழுங்குவதற்கு பதில் வீரியம் பெறவே வழிவகுக்கும் என்பதை அமைச்சரின் கவணத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.

முஸ்லிம் கல்விக் கூடங்களில் தீவிரவாத மூலைச் சலவையா?

கௌரவ அமைச்சர் அவர்களின் உரையில், இலங்கையில் செயற்படும் முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளில் கல்வி புகட்ட வருகை தந்திருக்கும் வெளிநாட்டு அறிஞர்களினால் இஸ்லாமிய பயங்கரவாத கருத்துக்கள் மாணவர்களுக்கு புகட்டப்பட்டு, தீவிரவாதத்தை நோக்கிய மூலைச்சலவை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் காலத்தில் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த சில இனவாத அமைப்புகளினால் பரப்பப்பட்ட போலியான குற்றச்சாட்டாகும் என்பது ஏறகனவே இந்நாட்டு முஸ்லிம்களால் விளங்கப்படுத்தப்பட்டு விட்டது.

அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்ற நிகழ்வுகள் முஸ்லிம் கல்விக் கூடங்களில் இடம் பெறுமேயானால் அதற்கெதிரான நடவடிக்கைகளை தக்க ஆதாரங்களின் அடிப்படையில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தயவாய் கேட்டுக் கொள்கின்றோம்.

2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கூறப்பட்டு வரும் இக்குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாமல் அவதூறாக பரப்பப்பட்டே வருகின்றது. இனவாதிகள் இதனைப் பரப்பலாம். ஆனால், நீதி அமைச்சர் எனும் பொறுப்பான பதவியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் அவர்கள் இதனை தன் நாவினால் வெளியிடுவதானது முஸ்லிம்களின் உள்ளத்தை முள்ளாக தைத்திருக்கிறது என்பதுடன், முஸ்லிம் கல்விக் கூடங்கள் குறித்த தப்பான பார்வையினை பொதுவான மக்கள் பார்ப்பதற்கும் வழிவகை செய்து விட்டதாகவே கருதுகின்றோம்.

எரியும் இனவாத நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாய் அமைச்சரின் இக்கருத்து அமைந்து விட்டமை துரதிஷ்டமே என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

முஸ்லிம்களுக்குள் மட்டும் தான் மதப்பிரிவு சண்டைகளா?

அமைச்சரின் உரையில் குறிப்பிடப்பட்ட இன்னுமொரு கருத்துத்தான் முஸ்லிம்கள் மத கருத்துக்கள் ரீதியாக பிளவுபட்டு தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள் என்பதாகும். ஒரு மதத்துக்குள்ளேயே பல கருத்தைச் சார்ந்த குழுக்கள், அமைப்புகள் உருவாகுவது என்பது இயல்பானது. அந்த வகையில் முஸ்லிம்களுக்குள்ளும் இது போன்ற வித்தியாசமான கருத்துக்களையும் மார்க்க நிலைப்பாடுகளையும் கொண்ட பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. எப்படி பௌத்தர்கள் தேரவாத – மஹாநாய என்று பிரிந்துள்ளார்களோ, கிறிஸ்தவர்கள் ரோமன் – புரட்டஸ்தாண்டு என்று பிரிந்துள்ளார்களோ, இந்துக்கள் பார்ப்பனர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனும் பல சாதிகள் அடிப்படையில் பிரிந்துள்ளார்களோ இது போன்று முஸ்லிம்களுக்குள்ளும் சில வித்தியாசமான நம்பிக்கைகளைக் கொண்ட பிரிவினர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை. தவறான புரிதல் காரணமாக இவ்வாறு பிரிந்து கிடக்கிறார்கள்.

அமைச்சர் அவர்களது உரை ஏதோ முஸ்லிம்களுக்குள் மாத்திரம் தான் குழுச்சண்டைகள் இடம்பெறுவது போன்ற தோற்றப்பாட்டை பொதுவான மக்களிடம் ஏற்படுத்திவிட்டுள்ளது.

ISIS ஆயுதக் குழு, ஜிஹாதிய சிந்தனை புகட்டப்படும் கல்விக் கூடங்கள் என்ற தவறான கருத்துக்களுடன் சேர்த்து முஸ்லிம்கள் தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டு கலவரத்தை உண்டாக்குகிறார்கள் என்று சொல்லும் போது முஸ்லிம்கள் என்றாலே இந்நாட்டுக்கு ஆபத்தானவர்கள் என்ற மனப்பதிவை இவ்வுரை ஏற்படுத்திவிடும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்குக் காரணம் என்ன?

முஸ்லிம்கள் குறித்த மேற்குறித்த தவறான புரிதல்களை அமைச்சர் அவர்கள் வெளியிட்டது போன்றே தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கும் காரணமாக “புத்தர் மனித இறைச்சி உண்டார்” என ஜமாஅத்தின் செயலாளரினால் கூறப்பட்ட தகவலே அடிப்படையாக அமைந்தது என்கிறார். இலங்கையில் உள்ள பௌத்த – முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று கூறும் போதே,தீவிரவாதத்துடன் இணைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளரையும் அமைச்சர் முடிச்சுப் போட்டு பேசுகின்றார்.

அமைச்சரின் இக்கருத்தும் தவறாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டுக் கொள்கின்றோம். தீவிரவாதிகள் என்ற அடைமொழிக்குள் தவ்ஹீத் ஜமாஅத்தை முடிச்சுப் போடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. காரணம், தவ்ஹீத் ஜமாஅத் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெரும்பான்மை சமுதாயத்தையோ அல்லது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சார்ந்த மத அமைப்பின் உறுப்பினர்களை வெட்டுவோம், அடிப்போம், தாக்குவோம், கொல்லுவோம் என்று எந்தவொரு கட்டத்திலும் அறிவித்ததே இல்லை.

குறிப்பிட்ட இனவாத அமைப்புகளை சார்ந்தவர்கள் இஸ்லாத்தை குறித்து தவறாக சித்தரிக்கும் போது அவற்றை ஜனநாயக வழிமுறைக்கு உட்பட்டு கருத்து ரீதியாக எதிர்கொள்ளும் வழிமுறையினையே தவ்ஹீத் ஜமாஅத் இது வரை காலமும் கடைப்பிடித்து வந்துள்ளது. இனவாத அமைப்புகள் தான் இந்த நிமிடம் வரை உயிரையும், உடைமைகளையும், மத நம்பிக்கைகளையும் அழிவுக்குட்படுத்தும் விதமான வார்த்தைகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர் என்பது உண்மையாகும். ஆனால், தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற தீவிரவாத வழிமுறைகளில் ஒருபோதும் களமிறங்கவில்லை என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதே போன்று, தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு புத்தரை இழிவுபடுத்தியதே காரணம் என்கிறார் அமைச்சர். இக்கருத்து தவறாது. புத்தரை நிந்திக்கும் விதமாக செயலாளர் பேசினாரா? இல்லையா? என்பது குறித்த வழக்கு ஏற்கனவே பல மாதங்களாக நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில் செயலாளர் மத நிந்தனையில் ஈடுபட்டார் என்று இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. தீர்ப்பு வழங்கப்படாது நிலுவையில் உள்ள ஒரு வழக்கினை தற்போதைய விளக்கமறியலுக்கான காரணமாக அமைச்சர் அவர்கள் சித்தரிப்பதானது உண்மைக்குப் புறம்பானதும், அனாவசியமான எண்ணக்கருவை விதைப்பதாக உள்ளது.

தற்போதைய விளக்கமறியலுக்கான காரணமாக அமைச்சர் கூறும் காரணத்தை நீதிமன்றம் தெரிவிக்கவேயில்லை என்பதை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இனவாதத்திற்கு எதிராய் நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்

நீதி அமைச்சரின் பாராளுமன்ற உரையானது இனவாதத்தை வெளிப்படுத்துவோருக்கு எதிரான கருத்தாக ஆரம்பித்தாலும் கூட, உரையின் இடைநடுவே இனவாதத்துடன் முடிச்சுப் போடப்பட்ட விடயங்கள் யாவும் முஸ்லிம்களையும் இஸ்லாமிய அமைப்புகளையும் ஒட்டியதாகவே அமைந்திருந்தமை மிகத்தெளிவானது.

இனவாத கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வரும் இத்தருணத்தில் இது போன்ற கருத்துக்கள் பாரிய அதிர்வுகளை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தும் என்பதுவே யதார்த்தம். இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த காத்திருக்கம் இனவாதிகளுக்கும், இலங்கை நாட்டின் அமைதியை சீர்குலைக்க தருணம் பார்த்திருக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும், கலவரத்தை தூண்டி பதவிக் கதிரையை காப்பாற்ற எண்ணியிருக்கும் சில அரசியல் வாதிகளின் ஆசைகளுக்கும் தீனி போடுவதாக அமைச்சரின் உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அமைந்து விடுமோ என்ற அச்சமே முஸ்லிம் சமூகம் அச்சமடையும் விடயமாகும்.

இது போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு வாய்ப்பளிக்காது உண்மையான கருத்துக்களை மக்கள் மயப்படுத்துமாறு அமைச்சர் அவர்களை வினயமாய் கேட்டுக் கொள்கின்றோம்.

முஸ்லிம்கள் என்போர் இந்நாட்டின் மூன்றாம் தர குடிமக்கள் அன்று. நாங்களும் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளே. எங்களதும், எம் முன்னோர்களினதும் தொப்புல் கொடி இந்நாட்டின் மண்ணில் தான் புதைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும், சமாதான சகவாழ்விலும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது. குறைத்து மதிப்பிட முடியாதது. மூன்று தசாப்த யுத்தத்தின் போது தீவிரவாதத்தை எதிர்த்து நாட்டின் பிரிவினையை ஏற்க மறுத்ததற்காய் எம் முஸ்லிம்கள் அகதிகளாய் துரத்தப்பட்டு இன்று வரை அலைக்கழிந்து திரிகிறார்கள் என்பதுவே உண்மை. நாட்டை கூறுபோடும் எந்தவொரு முடிவுக்கும் முஸ்லிம்கள் இது வரை வந்தது கிடையாது என்பதையும் முஸ்லிம்கள் சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறது.

இவன்,
M.F.M ரஸ்மின் MISc,
துணை செயலாளர்,
தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
-கொழும்பு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -