கடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என சொன்னதற்காக ஆஸாத் சாலி கைது செய்யப்பட்ட போது அவர் தவ்ஹீத் சார்பு முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற நிலையிலும் தவ்ஹீத்வாதிகள் உட்பட முஸ்லிம்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். எந்தவொரு அமைப்பும் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டது சரி என கூறவில்லை. ஆசாத் சாலியின் கைதை மஹிந்த காலத்திலேயே முதன் முதலில் கண்டித்தது உலமா கட்சியே. ஆனால் தற்போது அப்துல் ராசிக் கைது செய்யப்படுவதற்கு முன்னின்றவர் அதே ஆசாத் சாலி என்பது முஸ்லிம் சமூகம் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
மஹிந்த காலத்தின் இறுதியில் முஸ்லிம்களுக்கெதிராக கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட போது அதற்கு மஹிந்தவே பொறுப்பு என கூறப்பட்டது. ஆனால் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளால் கொண்டு வரப்பட்ட இந்த ஆட்சியில் அதை விட மோசமாக இன மத வெறுப்புப்பேச்சுக்கள் பேசப்படும் போது அதற்கு இன்றைய அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும். இவற்றின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார் என சிந்திக்கத்தெரியாத சிலர் சொல்கிறார்கள். அவ்வாறு அவர் இருந்தால் அவரின் ஒத்துழைப்புடன் இத்தகைய இனவாதிகள் செயற்படுவதாக இருந்தால் இவர்களை மிக இலகுவாக அரசால் கைது செய்ய முடியும். மஹிந்தவின் இரு மகன்களை கைது செய்ய முடிந்த அரசுக்கு மஹிந்தவினால் இயக்கப்படுவதாக சொல்லப்படும் மத குருக்களை கைது செய்வது கஷ்டமான காரியமா என்று கூட சிந்திக்கத்தெரியாத சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது.
எம்மை பொறுத்தவரை யார் அவர் எந்த மதத்;தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு மதத்துக்கு எதிராகவோ, அல்லது இனத்தை இழுத்து தூற்றினாலோ அவர் கைது செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை சொல்லி வருகிறோம். இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என பார்க்கக்கூடாது. இப்படியான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட ஏலவே முயற்சி எடுக்கப்பட்ட போது அதனை எதிர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று மட்டக்களப்பு விகாராதிபதியின் வெறுப்புப்பேச்சை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே அப்துல் ராசிக் விடயத்தில் முஸ்லிம்கள் தமது மார்க்க கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அவருக்கு நியாயம் கிடைக்க பிரார்த்திப்பதுடன் இது விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.