வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றம்:சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தொடர்பில் சம்மந்தனுக்கு கடிதம்

என்.எம்.அப்துல்லாஹ்

வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களுடைய கருத்துக்கள் தவறான அடிப்படைகளைக் கொண்டவையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் அவசரக் கடிதம்.

கௌரவ இரா.சம்பந்தன் (பா.உ)
எதிர்கட்சித் தலைவர்,
தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கொழும்பு

கௌரவ தலைவர் அவர்களுக்கு,

தங்களது தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைக் கட்சிகளுள் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவராகிய கௌரவ சுரேஷ் பிரேமசந்திரன் அவர்கள் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் முன்வைத்துவரும் கருத்துக்கள் தொடர்பில் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 26வருட நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட சந்திப்பில் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் (பா.உ) அவர்களால் முன்வைக்கப்பட்ட 'வடக்கு முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தது இனச்சுத்திகரிப்பே' 'வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வடக்கு மாகாணசபை வேண்டுமென்றே அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிக்கின்றது' போன்ற கருத்துக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னைய நாள் ஊடகப் பேச்சாளரும், முன்னையநாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமாகிய கௌரவ சுரேஷ் பிரேமசந்திரன் அவர்கள் மறுப்புகளைத் தெரிவித்திருந்தார். இம்மறுப்புகள் தவறான அடிப்படைகளைக் கொண்டவையாகும், இது குறித்து தாங்கள் தங்களது உடனடிக் கவனத்தை செலுத்தவேண்டும் என வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் தங்களைக் கேட்டு நிற்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் தமது உரிமைப் போராட்டம் தொடர்பில் இரண்டு நிலைகள் இருப்பது யாவரும் அறிந்த உண்மையேஇ ஒன்று ஜனநாயகத்தை மதிக்கின்ற, மனித உரிமைகளை மதிக்கின்ற மென்போக்கைக் கடைப்பிடிக்கின்ற ஒரு நிலைப்பாடும், தீவிரவாதத்தை விரும்புகின்ற, மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்காத தமது விடுதலையை மாத்திரம் குறியாகக்கொண்டு செயற்படுகின்ற இரண்டாவது நிலைப்பாடுமே அவையாகும். இவ்விரண்டு நிலைப்பாடுகளில் மென்போக்கான நிலைப்பாடுகளுடனேயே முஸ்லிம் மக்கள் தம்மை இணைத்துக் கொண்டிருந்தார்கள், வன்முறைசார் போராட்டங்களின்போது முஸ்லிம் மக்கள் அதனைவிட்டும் ஒதுங்கி பார்வையாளர்களாகவே இருந்திருக்கின்றார்கள். இதுவே வரலாறு நெடுகிலும் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையாகும்.

தீவிர சிந்தனையுடையோர் முஸ்லிம்களின் வெளியேற்றம் 'இனச்சுத்திகரிப்பு' நடவடிக்கையல்ல; முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் வெளிப்படுத்தும் தடைகள் குறித்து கூடுதல் சிரத்தை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை; போன்ற நிலைப்பாடுகளை முன்வைக்கின்றார்கள், இதனையே கௌரவ சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கின்றார், இது தவறான அடிப்படைகளைக் கொண்டதாகும். அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும். இத்தகைய கருத்துக்களால் தமது ஆதரவாளர்களைக் குசிப்படுத்திஇ முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தூண்டிவிட முடியுமே தவிர தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ நன்மைகளைப் பெற்றுத்தர முடியாது என்பதை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் புரிந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் மிக வெளிப்படையாகக் கோரி நிற்கின்றது.


வடக்கு முஸ்லிம் மக்களுக்கும், வடக்கின் தமிழ் மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தவும் பல்வேறு தரப்பினர் பலவிதமான முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள், நீங்களும் மேடைப் பேச்சுக்களின்போது நாம் முஸ்லிம் மக்களை அரவணைத்துச் செல்கின்றோம் என்றும் குறிப்பிடுகின்றீர்கள் ஆனால் தமிழ் மக்களின் தலைவர்கள் முஸ்லிம் மக்கள் சார்ந்து கருத்துக்களை வெளியிடும்போது அந்த தலைவர்களை எதிர்க்கின்ற நோக்கில் நீங்கள் வெளியிடும் கருத்துக்கள் முஸ்லிம் மக்களிடத்திலே அதீத பாதிப்புக்களையும், தமிழ்த் தலைவர்கள் இனத்துவேசமகா கருத்துக்களை முன்வைக்கின்றார்கள் என்றும் மக்கள் கருதுகின்றார்கள். இது ஆரோக்கியமான நிலைமையல்ல.

வடக்கிலே முஸ்லிம் மக்கள் மென்போக்கு அரசியல் தலைவர்களுடன் இணைந்திருப்பதை முஸ்லிம் தீவிரவாத சிந்தனையுள்ள ஒரு சிலர் விரும்பாததைப் போலவே, தமிழ் மக்களிடையே இருக்கும் தீவிரவாத சிந்தனையுள்ளவர்களும் எதிர்க்கவே செய்கின்றார்கள் இதனை ஒரு இயல்பான விடயமாக நாம் நோக்கினாலும், இதன் விளைவுகள் பாரிய பின்விளைவைத் தரக்கூடியவை என்ற காரணத்தினால் இவற்றை மௌனமாகப் பார்த்துக்கொண்டும் இருக்க முடியாது. இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து தமிழ் மக்களிடையே இனத்துவேசத்தை வளர்ப்பதையிட்டும் இனிவரும் காலங்களிலாவது உங்களது தலைமையில் இயங்கும் கூட்டமைப்பின் இணைக் கட்சிகளுள் ஒன்றாகிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தவிர்ந்துகொள்வார் என நம்புகின்றோம்.

வடக்கு மாகாணசபை முஸ்லிம்களின் விடயங்களில் அசமந்தமாகச் செயற்படுவது உண்மையே, குறிப்பாக ஒரு சிறு குழுவினர் முஸ்லிம்களுக்கு எதிராக உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை முன்வைத்து வருவதும் உண்மையே இதற்கான நிறைய ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன இவற்றைப் பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை என்றும் ஒரு மாற்றத்திற்காக தமிழ் மக்களைப் போலவே முஸ்லிம் மக்களும் காத்திருக்கின்றார்கள். அந்தக் காத்திருப்பு நிரந்தர அமைதியை இந்த நாட்டிலே உருவாக்குகின்ற முயற்சிக்கு துணை நிற்பதற்காகவேயாகும்.

தாங்கள் தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்தும் அதே சந்தர்ப்பத்தில் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாண முஸ்லிம் தமிழ் உறவை வலியுறுத்தி வருகின்றீர்கள்இ இவ்வாறான நிலையில் தங்களது கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் இவ்வாறு முஸ்லிம்கள் குறித்து தீவிர கருத்துக்களை முன்வைத்திருப்பது ஆரோக்கியமானதல்ல, மேற்படி விடயத்தை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவதோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தயவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
ஏ.ஆர்.ஏ.றமீஸ்
தவிசாளர்
வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -